PUBLISHED ON : அக் 15, 2024 12:00 AM

சிவகங்கை தொகுதியில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற காங்., -- எம்.பி., கார்த்தி, கவிஞர் கண்ணதாசன் ஊரான சிறுகூடல்பட்டியில், அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.
அங்கு எழுதப்பட்டிருந்த, 'போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரி துாற்றுவோர் துாற்றட்டும்; தொடர்ந்து செல்வேன், ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன்; எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்' என்ற கவிதை வரிகளை உரக்க படித்தார். அப்போது, 'இது எனக்காகவே எழுதப்பட்டது போல உள்ளது' என்றார்.
அடுத்த கிராமத்தில் பேசுகையில், 'ஆட்சியில் பங்கு கோரிக்கை நியாயமானது. என்கவுன்டர்கள் கண்டிக்கத்தக்கவை. கள்ளச்சாராயம் இப்பவே இருக்கு. மதுவிலக்கு வந்தால் அதிகரிக்கும்' என, அரசுக்கு எதிராகவே பேசினார்.
உடன் சென்ற காங்கிரஸ் கட்சியினர், 'இப்படி எல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிர்பாட்டு பாடினால், கண்ணதாசன் கவிதை வரிகள் பொருத்தமா தான் இருக்கும்...' என, முணுமுணுத்தவாறு நடந்தனர்.

