PUBLISHED ON : அக் 19, 2024 12:00 AM

தி.மு.க., அரசை கண்டித்து, மதுரையில், அ.தி.மு.க., சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், அக்கட்சி பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,'அ.தி.மு.க., கூட்டணியில் வி.சி., இணைய போகிறது என்ற செய்தி வெளியானால், என்ன விளைவு ஏற்படும் என, திருமாவளவனுக்கு தெரியும். அது தெரிந்து, அந்த ஆயுதத்தை கையில் எடுத்தார்; அது வெற்றி பெற்று விட்டது.
'அவர் வேண்டியதை சாதித்துக் கொண்டார். இதனால், பெயரளவில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தினார். 'கேப்பையில் நெய் வடிகிறது என்றால், கேட்பவருக்கு அறிவு எங்கே போனது?' என கிராமத்தில் கேட்பது போல, எல்லார் காதிலும் பூ சுற்றி, மாநாட்டை நடத்தி விட்டார் திருமாவளவன்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'எப்படியாவது தி.மு.க., கூட்டணி உடையாதா என காத்திருந்த இவங்க காதுக்கும் பூ தானே...' என முணுமுணுக்க, அனைவரும் கமுக்கமாக சிரித்தனர்.

