PUBLISHED ON : செப் 17, 2025 12:00 AM

சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல குழு கூட்டம் நடந்தது. இதில், மாநகராட்சி உதவி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் காசிநாதன் பேசுகையில், 'மாநகராட்சி அதிகாரிகள் தவிர, மற்ற துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதே கிடையாது. குறிப்பாக, வருவாய் துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வருவதேயில்லை. அவர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டாலும், போனையே எடுப்பதில்லை. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'ஆளுங்கட்சி கவுன்சிலர் போனையே எடுக்காத அதிகாரிகள், சாதாரண மக்கள் போனை எல்லாம் எடுத்து எப்படி பதில் தருவாங்க...' என, முணுமுணுத்தார்.
சக நிருபரோ, 'அதிகாரிகளுக்கு என்ன பிரச்னை...? நாளைக்கு ஓட்டு கேட்டு போற ஆளுங்கட்சியினர் தானே மக்கள்கிட்ட சிக்கி அவதிப்படணும்...' என்றபடியே, அங்கிருந்து கிளம்பினார்.