PUBLISHED ON : ஆக 13, 2025 12:00 AM

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சிதம்பரத்தின் தொகுதி நிதியில், சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அரசு மருத்துவமனையில், 'டயாலிசிஸ் மையம்' கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
இதில் சிதம்பரம் பேசுகையில், 'ஒப்பந்ததாரருக்கு ஒரு வேண்டுகோள். தரமாக கட்ட வேண்டும். மாதம் இரு முறை வந்து பார்ப்பேன். தரமான சிமென்ட், செங்கல், தரமான கலவையில் கட்ட வேண்டும். ஒரு அரசு கட்டடம், 50 ஆண்டுகளாவது இருக்க வேண்டும்.
'பத்திரிகைகளில் பார்க்கிறோம். கட்டடம் கட்டிய நாலாவது நாளில் விழுகிறது. கட்டும்போதே பாலம் விழுகிறது. அது மாதிரி இருக்கக்கூடாது. கல்லணை, தாஜ்மஹால் எல்லாம் சிமென்ட் வருவதற்கு முன் கட்டப்பட்டவை; இன்று வரை உள்ளன. கட்டடக் கலையில் பழுதில்லை; கட்டடக் கலைஞர்களிடம் தான் பழுது...' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'ஒப்பந்ததாரரிடம் அரசியல்வாதிகள், 'கமிஷன்' கேட்காம இருந்தால் தானே, கட்டடத்தை தரமா கட்ட முடியும்...' என முணுமுணுக்க , அருகில் இருந்தவர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.