PUBLISHED ON : மார் 03, 2024 12:00 AM

மதுரையில், அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில், அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். அப்போது, நிருபர்களை சந்தித்த பழனிசாமியிடம், 'இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என பன்னீர்செல்வம் கூறுகிறாரே' எனக் கேட்டதற்கு, 'உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தெளிவாக சொல்லிய பிறகு எப்படி முடக்க முடியும்? அவரது ஆசை நிராசையாகிவிடும்' என்றார்.
தொடர்ந்து நிருபர் ஒருவர், 'கட்சி கொடியுடன் பன்னீர்செல்வம் செல்கிறாரே' என, கேட்டதற்கு, 'அவர் கொடி கட்ட முடியாதே... நீங்கள் பார்த்தீர்களா... பார்த்தால் சொல்லுங்க, அப்படி இருந்தால் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும்... ஆதாரம் இருந்தால் கொடுங்கள்...' என, கூறிவிட்டு புறப்பட்டார்.
மூத்த நிருபர் ஒருவர், 'நம்மிடம் ஆதாரம் கேட்கிறாரே... இவங்க கட்சிக்கு தமிழகம் முழுதும், 2 கோடி உறுப்பினர் இருக்காங்கன்னு சொல்றாங்களே... அவங்க ஆதாரம் தரலையா...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

