PUBLISHED ON : ஆக 23, 2025 12:00 AM

தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'கிராமப்புறங்களில், 2,500 சதுர அடிக்கு மேல் கட்டடம் கட்ட அனுமதி வாங்க வேண்டும்; மீறி கட்டினால் சீல் வைக்கப்படும். ஒரு சட்டத்தை அரசு சும்மா கொண்டு வராது. மக்களின் பாதுகாப்பிற்காக தான் கொண்டு வருகிறது.
'முன்பு அனைத்து வித கட்டடங்களுக்கும் அனுமதி வாங்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். தற்போது, ஆன்லைனில் விண்ணப்பித்து, அனுமதி பெற்று பணி களை செய்து கொள்ள லாம் கடந்த 10 மாதங்களில், 1 லட்சம் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டி கொண்டிருக்கின்றனர்...' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'என்னதான் ஆன்லைனில் விண்ணப்பிச்சாலும், 'கட்டிங்' வெட்டுனா தானே, அனுமதி தர்றாங்க...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.