PUBLISHED ON : டிச 24, 2025 04:27 AM

திண்டுக்கல் மாவட்டம், பழனியில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், '2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் அரசியல் திருப்புமுனையாக அமையும். தற்போது, தி.மு.க., அரசு ஓட்டுகளை பெறும் நோக்கத்தில், ஹஜ் பயணியருக்கு கட்டடம், கல்லுாரி மாணவ - மாணவியருக்கு இலவச மடிக்கணினிகளை வழங்குகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளாக ஏன் இதை செய்யவில்லை?
'அன்றைய காலகட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'தமிழகத்தில் பா.ஜ., கொடி கட்ட ஒரு அடி இடம் கூட தர முடியாது' என, கூறினார். ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும், பா.ஜ., கொடிகள் பறக்கின்றன. கேரள மாநில தலைநகரான, திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றி, அம்மாநிலத்தின் இதயத்தையே பிடித்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், கேரளாவிலும் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்...' என்றார்.
பேட்டியைக் கண்ட பார்வையாளர் ஒருவர், 'கேரளாவுல இருக்கட்டும்... தமிழகத்துல ஒரு உள்ளாட்சிலயாவது, பா.ஜ., காலுான்றுகிறதா பார்க்கலாம்...' எனக் கூறி, நடையைக் கட்டினார்.

