PUBLISHED ON : டிச 23, 2024 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில், டிச., 31ம் தேதி நடக்க உள்ள படித்திருவிழா ஏற்பாடு குறித்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பல துறை அதிகாரிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டும், அதிகாரிகளுக்கு பதில் கீழ்மட்ட அலுவலர்கள் தான் பங்கேற்றனர்; ஆர்.டி.ஓ., கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழித்தனர்.
போக்குவரத்து அலுவலரிடம், 'படித்திருவிழாவிற்கு எத்தனை சிறப்பு பஸ்கள் இயக்க போகிறீர்கள்' என, ஆர்.டி.ஓ., கேட்க, 'கிளை மேலாளரை கேட்டு சொல்கிறேன்' என, அத்துறை ஊழியர் கூறியதால், ஆர்.டி.ஓ., 'டென்ஷன்' ஆனார்.
விசாரித்தபோது, ஒரு துறையில் இருந்து கூட அதிகாரிகள் வராமல், அலுவலர்களை அனுப்பி வைத்ததால் ஆத்திரமடைந்த, ஆர்.டி.ஓ., 'கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும்; தவறினால் கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்' என, எச்சரித்தார்.
இதை கேட்ட அலுவலர் ஒருவர், 'கலெக்டர் தான் கூட்டம் நடத்தணும்... அவருக்கு கீழ் உள்ள இவர் கூட்டம் நடத்தலாமா...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

