PUBLISHED ON : செப் 13, 2026 01:52 AM

செப்டம்பர் 13:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டை பூர்வீகமாக கொண்ட பிரபல நடிகர் முத்துராமன் - சுலோச்சனா தம்பதியின் மகனாக, 1960ல் இதே நாளில் ஊட்டியில் பிறந்தவர், முரளி கார்த்திகேயன் எனும் கார்த்திக்.
சென்னை புது கல்லுாரியில் படித்த இவர், இயக்குநர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, மாநில அரசின் விருதை பெற்றார். தொடர்ந்து, 1980 - 90களில், மணிரத்னம், விசு, ஆர்.சுந்தர்ராஜன், அமீர்ஜான், ஆர்.வி.உதயகுமார், பாசில், விக்ரமன், அகத்தியன், சி.சுந்தர் உள்ளிட்ட பிரபல திரைப்பட இயக்குநர்களின் படங்களில் நடித்தார்.
மவுன ராகம், அக்னி நட்சத்திரம், வருஷம் பதினாறு, கிழக்கு வாசல், கோபுர வாசலிலே, அமரன், பொன்னுமணி, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து, 'பிலிம்பேர், கலைமாமணி' என பல விருதுகளை பெற்றார்.
அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக அரசியல் வாழ்வை தொடங்கினார். பின், அதிலிருந்து விலகி, அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, மனித உரிமைகள் காக்கும் கட்சிகளை தொடங்கினார்.
நவரச நாயகனின் 66வது பிறந்த தினம் இன்று!
