PUBLISHED ON : ஜன 05, 2026 02:53 AM

ஜனவரி 5, 1956
நாகப்பட்டினத்தில், பெருமாள் கோவில் அர்ச்சகர் துரைஸ்வாமி பட்டாச்சார்யார் - அம்புஜம் தம்பதியின் மகனாக, 1956ல், இதே நாளில் பிறந்தவர் நாகை முகுந்தன்.
இவர், நாகை தேசிய உயர்நிலை பள்ளி, மயிலாடுதுறை ஏ.பி.சி., கல்லுாரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் படித்தார். தனியார் வங்கியில், கலை, கலாசார துாதுவர் மற்றும் மக்கள் தொ டர்பு அதிகாரியாக பணியாற்றினார்.
இவரது, 13வது வயதில் புலவர் கீரனின் உரையால் ஈர்க்கப்பட்டு, அவரிடமே இலக்கண, இலக்கியங்களை கற்றார். தன், 15வது வயதில், ஸ்ரீ முருகனடியார்கள் சங்கத்தின் சார்பில், சென்னை, கச்சாலீஸ்வரர் கோவிலில், நாடக பாணியில் உரை நிகழ்த்தி, பக்தர்களை கவர்ந்தார்.
தொடர்ந்து உள்நாடு, வெளிநாடுகளில் கம்பராமாயணம், வில்லிபாரதம், ஆழ்வார்கள் சரித்திரம், நாயன்மார்கள் வரலாறு, திருப்பாவை, கந்தபுராணம், அபிராமி அந்தாதி, பகவத் கீதை, பாரதியாரின் குயில் பாட்டு உள்ளிட்டவற்றை விவரித்து, ஆன்மிக உரை நிகழ்த்தினார்.
கவுரவர்களின், 100 பெயர்களை கூறுவது, ராமாயண பாடல்களை மூச்சு விடாமல் பாடுவது என, தன் சொற்பொழிவில் சுவாரஸ்யங்களை சேர்த்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உள்ளிட்டோரின் பாராட்டுகளையும், கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரது, 70வது பிறந்த தினம் இன்று!

