PUBLISHED ON : டிச 13, 2025 03:23 AM

டிசம்பர் 13:
விருதுநகர் மாவட்டம், சிவகாசிக்கு அருகில் உள்ள நதிக்குடியில், 1932 டிசம்பர் 18ல் பிறந்தவர், நா.பார்த்தசாரதி.
மதுரை தமிழ் சங்கத்தில் பண்டிதர் பட்டம், சென்னை பச்சையப்பன் கல்லுாரியில், தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., பட்டம் பெற்று, மகாகவி பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய, மதுரை சேதுபதி பள்ளியில் இவரும் ஆசிரியரானார்.
'கல்கி' இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பை ஏற்று, அதில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். 'தீரன், அரவிந்தன், மணிவண்ணன்' உள்ளிட்ட புனை பெயர்களில் கதைகள் எழுதினார். 'தீபம்' என்ற இலக்கிய இதழை நடத்தினார்.
இவரது பயண கட்டுரைகள், 'புது உலகம் கண்டேன், ஏழு நாடுகளில் எட்டு வாரங்கள்' என்ற நுால்களாக வெளிவந்தன. இவர் எழுதிய, 'குறிஞ்சி மலர், பொன்விலங்கு' உள்ளிட்ட நாவல்கள், தொலைக்காட்சி தொடர்களாகி பிரபலமடைந்தன. 'சமுதாய வீதி' என்ற நெடுங்கதைக்காக, 'சாகித்ய அகாடமி' விருது பெற்றார்.
இவரது கதைகளின் நாயகன் - நாயகியர் பெயர்களை, வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்ந்தனர். காமராஜரின் ஸ்தாபன காங்கிரசில் பேச்சாளராகவும் இருந்த இவர், தன் 55வது வயதில், 1987ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

