PUBLISHED ON : நவ 29, 2025 12:00 AM

நவம்பர் 29: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் உள்ள ஒழுகினசேரியில், 1908ம் ஆண்டு இதே நாளில், சுடலைமுத்து பிள்ளை -- இசக்கியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர், என்.எஸ்.கிருஷ்ணன்.
வறுமையால் டென்னிஸ் மைதானத்தில் பந்து எடுத்து போடுவது, மளிகை கடையில் பொட்டலம் மடிப்பது, நாடக கம்பெனியில் சோடா விற்பது உள்ளிட்ட வேலைகளை செய்தார். பின் நாடக நடிகராகி, சொந்தமாக நாடக கம்பெனி நடத்தினார்.
வில்லுப்பாட்டு, தெருக்கூத்தில் வல்லவரான இவர், சதிலீலாவதி படத்தில், தனி நகைச்சுவை பகுதி எழுதி, நடித்தார். தொடர்ந்து, 150 படங்களில் நடித்தார்; சில படங்களை தயாரித்தார்.
தன்னுடன் நடித்த மதுரத்தை, இரண்டாம் தாரமாக மணந்தார். நாட்டின் அறிவியல் வளர்ச்சியை விரும்பிய இந்த ஜோடி, பல படங்களில் பாடி, நடித்து சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தனர். காந்தியவாதியான இவர், தன் ஊரில் காந்திக்கு நினைவு துாண் எழுப்பினார். சினிமா சிரிப்பை சிந்தனைக்கு பயன்படுத்திய இவரை, கலைவாணர் என, அழைத்தனர்.
வறியோருக்கு வாரி வாரி வழங்கி, 'திரையுலக கர்ணன்' என புகழப்பட்ட இவர், தன், 49வது வயதில், 1957 ஆகஸ்ட் 30ல் மறைந்தார்.
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள, 'கலைவாணர் அரங்கம்' இவரது பெயரை தாங்கி நிற்கிறது.
இவரது பிறந்த தினம் இன்று!

