PUBLISHED ON : செப் 05, 2025 12:00 AM

செப்டம்பர் 5, 1872
துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில், உலகநாதன் பிள்ளை - பரமாயி அம்மாள் தம்பதிக்கு மகனாக, 1872ல் இதே நாளில் பிறந்தவர், வ.உ.சி., எனப்படும், வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை.
இவர், திருநெல்வேலி ஹிந்து கல்லுாரியில் படித்து, தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின், திருச்சியில் சட்டம் படித்து, ஓட்டப்பிடாரம், துாத்துக்குடி நீதிமன்றங்களில் ஏழைகளுக்கு இலவசமாக வாதாடினார். பாரதியார், சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோருடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.
துறவி ராமகிருஷ்ணானந்தரால், இவருக்குள் சுதேசி சிந்தனை உதித்தது. 'பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன்' என்ற கப்பல் கம்பெனிக்கு எதிராக, 'சுதேசி நாவாய் சங்க'த்தை உருவாக்கி, வாடகை கப்பல்களை இயக்கினார். அது முடக்கப் பட்டதும், மக்கள் பங்களிப்புடன் சொந்த கப்பலை இயக்கினார். பிரிட்டிஷ் அரசு இலவச சேவையை துவக்கி, அதையும் முடக்கியது.
கோரல் நுாற்பாலை தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி, ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, சிறையில் செக்கிழுத்தார். விடுதலைக்கு பின் வறுமையில் வாடியவர், 64வது வயதில், 1936, நவம்பர் 18ல் மறைந்தார்.
'கப்பல் ஓட்டிய தமிழன்' பிறந்த தினம் இன்று!