PUBLISHED ON : ஏப் 05, 2025 12:00 AM

ஏப்ரல் 5, 1901
தென்காசி மாவட்டம், வல்லத்தில், சுப்பையா பிள்ளை - கோமதி தம்பதியின் மகனாக, 1901ல் இதே நாளில் பிறந்தவர் சிவசங்கர நாராயண பிள்ளை எனும் எஸ்.எஸ்.பிள்ளை.
இவர், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, உறவினரிடம் வளர்ந்தார். செங்கோட்டை நடுநிலைப் பள்ளி யில் படித்தபோது, ஆசிரியர் சாஸ்திரியார் இவரது அறிவுக்கூர்மையை கண்டறிந்தார். அவரது உதவியால், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லுாரி, திருவனந்தபுரம் மகாராஜா கல்லுாரிகளில் படித்தார்.
புகழ் பெற்ற கணித ஆசிரியர் ஆனந்த ராவின் கீழ், சென்னை மாநில கல்லுாரியில் கணிதவியலில் நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார். சென்னை பல்கலையில், அறிவியல் மதிப்புறு முனைவர் எனும் டி.எஸ்சி., பட்டம் பெற்றார்.
சிதம்பரம் அண்ணாமலை, திருவனந்தபுரம், கொல்கட்டா, சென்னை பல்கலைகளில் பணியாற்றினார். 76 கணித ஆய்வு கட்டுரைகளை எழுதினார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையின் சர்வதேச கணிதவியல் மாநாட்டில் பங்கேற்க, இவர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியதால், தன் 49வது வயதில், 1950, ஆகஸ்ட் 31ல் காலமானார்.
இவரது பிறந்த தினம் இன்று!

