PUBLISHED ON : அக் 28, 2026 12:00 AM

அக்டோபர் 28: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், மகாத்மா காந்தி – கஸ்துாரிபா காந்தி தம்பதியின் மகனாக, 1892ல் இதே நாளில் பிறந்தவர், மணிலால் காந்தி. தந்தையின் வழிகாட்டுதலில் தென் ஆப்ரிக்காவில் கல்வி கற்றவர், அச்சக பணியையும் இளம் வயதிலேயே கற்றுக் கொண்டார்.
தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக தந்தை நடத்திய சத்தியாகிரக போராட்டங்களில் பங்கேற்று, பலமுறை சிறை சென்றார். 1917ல் தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களின் உரிமை குரலாக விளங்கிய, ‘இந்தியன் ஒப்பீனியன்’ இதழின் வெளியீட்டு பணியில் ஈடுபட்டார். 1920ல் அதன் ஆசிரியராகி, 36 ஆண்டுகள் இதழை நடத்தினார்.
இன பாகுபாட்டுக்கு எதிராகவும், இந்தியர்களின் சம உரிமைகளுக்காகவும் எழுத்து மற்றும் அகிம்சை போராட்டம் மூலம் குரல் கொடுத்தார்.
மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி, தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களுக்கும், பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஆதரவாக செயல்பட்டார்; அந்நாட்டின் இன பாகுபாடு சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களிலும் பங்கேற்றார். காந்திய பாரம்பரியத்தை தென் ஆப்ரிக்காவில் நிலைநிறுத்திய இவர், தன் 63வது வயதில், 1956 ஏப்ரல் 5ல் காலமானார்.
இவரது பிறந்த தினம் இன்று!
