PUBLISHED ON : அக் 22, 2026 12:00 AM

அக்டோபர் 22: பஞ்சாபில், பண்டிதர் ஹீரானந்த் கோஸ்வாமி மகனாக, 1873ல் இதே நாளில் பிறந்தவர் தீர்த்த ராம். இவரது தாய் சில நாட்களிலேயே மறைந்ததால், உறவினர்களின் பராமரிப்பில் வளர்ந்தார்.
கடினமான சூழலில் கல்வி கற்ற இவர், அன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்த லாகூர் கல்லுாரியில் கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்று, அங்கேயே பேராசிரியராக பணியாற்றினார். விவேகானந்தரின் தாக்கத்தால் துறவறம் பூண்டு ராம தீர்த்தரான இவர், மனிதநேயத்தையும், ஆன்மிகத்தையும் மக்களிடையே பரப்பினார்.
கடந்த 1902ல் அமெரிக்கா சென்று, ஆங்கிலத்தில் சொற்பொழிவுகள் நிகழ்த்தி, இந்திய தத்துவத்தை உலகறியச் செய்தார். இளைஞர்கள், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ஊக்கமளித்தார் . இவரது உரைகள், எழுத்துகள், ‘இன் உட்ஸ் ஆப் காட் ரியலைசேஷன்’ என்ற ஆங்கில தொகுப்பா க வெளியிடப்பட்டன.
‘தேசப்பற்றும், ஆன்மிகமும் மனித குல மேம்பாட்டிற்கு அவசியம்’ என வலியுறுத்தினார். இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவும், தத்துவ அறிஞராகவும் போற்றப்படும் இவர், தன் 33-வது வயதில், 1906, அக்டோபர் 17ல், உத்தரகண்ட் மாநிலம், தெஹ்ரியில் கங்கையின் கிளை ஆற்றில் நீராடியபோது, அதில் மூழ்கி உயிரிழந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
