PUBLISHED ON : டிச 19, 2025 03:21 AM

கோ.பாண்டியன்,
செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாற்றாக, புதிதாக, 'விக் ஷித் பாரத்'
ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு உறுதி சட்டம் - -2025 என்ற பெயரில்,
புதிய திட்ட மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்துள்ளது, மத்திய பா.ஜ.,
அரசு.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
காங்கிரஸ் ஆட்சியில், 2005ல் கொண்டு வரப்பட்டது, மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலைவாய்ப்பு உறுதி திட்டம்; இது வெறும் திட்டம் தான், எப்போது
வேண்டுமானாலும் கைவிடப்படலாம்.
ஆனால், மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ளது, வேலை வாய்ப்பு உறுதி சட்டம்; அச்சட்டத்தை எளிதில் கைவிட முடியாது.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், ஒரு நிதியாண்டில்
ஒருவருக்கு, 100 நாட்கள் வேலை கிடைக்க உறுதி செய்கிறது; ஆனால், புதிய
சட்டமோ, 125 நாட்கள் வேலையை உறுதி செய்கிறது.
அத்துடன்,
பயனாளிகளுக்கு தெரியாமல் அவர்களது அட்டையை பயன்படுத்தி, அரசு ஊழியர்கள்
நிதி மோசடி செய்வதை தடுக்கும் வகையில், 'பயோ மெட்ரிக்' உட்பட, டிஜிட்டல்
முறையில் வேலை திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இதில், விவசாய வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வேலை வாய்ப்பை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் நிறைந்துள்ளன.
மேலும், வரும் 2047க்குள் வளர்ந்த இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்ற இலக்கை மையமாக வைத்து, இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது வேலை வாய்ப்பை உருவாக்குவதுடன், ஊரக உள்கட்டமைப்பு வசதியையும் மேம்படுத்தும்!
மத்திய அரசின் இந்த புதிய சட்டம், இத்திட்டத்தின் வாயிலாக அரசு அலுவலர்கள்
மற்றும் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதை கட்டுப்படுத்துவதால்,
எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.
அவ்வகையில், தன் கட்சிக்காரரர்கள்
இத்திட்டத்தில் ஊழல் செய்து சம்பாதிக்க முடியாதே என்ற எரிச்சலில், 'மத்திய
பா.ஜ., அரசு தேச தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால், அவர் பெயரைத்
துாக்கி விட்டு வாயில் நுழையாத வடமொழி பெயரை திணித்துள்ளது' என்று
நீலிக்கண்ணீர் வடிக்கிறார், முதல்வர் ஸ்டாலின்!
தண்ணீர் கண்ட இடமெல்லாம் வாய் வைக்கும் ஆடுபோல், மக்களுக்கான திட்டம் என்றாலே தங்களின் சட்டைப் பை நிரம்ப வேண்டும் என்றால் எப்படி?
கருத்து சுதந்திரம் தி.மு.க.,வின் பிறப்புரிமையா?
இ.முத்து விசுவநாதன், நல்லசோபரா, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அது குறித்து கவலைப்படாத தி.மு.க., அரசு, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவோரை கைது செய்து, தன் அதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு சொன்னதற்காக, நீதிபதி சுவாமிநாதனின் ஜாதியைச் சொல்லி, தி.மு.க., உடன்பிறப்புகள் கடுமையாக விமர்சனம் செய்த போதும், பொது மேடையில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த போதும் வழக்கு பதியாத காவல் துறை, தி.மு.க., - எம்.பி., கனிமொழி குறித்து கருத்து பதிவிட்டவரையும், ஆளுங்கட்சியை விமர்சித்த யு - டியூபர் சவுக்கு சங்கரையும் கைது செய்துள்ளது.
இவ்வாறு விமர்சனக் குரல்களை ஒடுக்குவதன் வாயிலாக, தாங்கள் செய்யும் குற்றங்களை எவரும் வெளியில் பேச மாட்டார்கள் என்று எண்ணுகிறது, தி.மு.க., அரசு.
'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்!' என்கிறது திருக்குறள்.
குறைகளை சுட்டிக் காட்டுவோர் எவரும் இல்லை என்றால், அந்த அரசனை எவரும் கெடுக்க வேண்டாம்; அவனே தன்னை அழித்துக் கொள்வான்.
ஆனால், தி.மு.க., ஆட்சியாளர்களையோ, ஆட்சியின் குறைகளையோ சுட்டிக்காட்டினால், அதை ஆராய்ந்து, திருத்திக் கொள்வதை விடுத்து, கருத்து பதிவிடுவோரை கைது செய்கின்றன.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரனை கைது செய்ய, எதிர்க்கட்சிகள் பலமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருந்தது. தற்போது, நகராட்சி துறை அமைச்சர் நேரு மீதான ஊழல் வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமலாக்கத் துறை இரு முறை கேட்டும், 'நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது' என்பது போல் அலட்சியம் காட்டுகிறது, தி.மு.க., அரசு.
அதேநேரம், அதுகுறித்து யாராவது தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் பதி விட்டால், ஓடிச்சென்று கைது செய்கிறது.
கருத்து சுதந்திரம் என்பது தி.மு.க.,விற்கு மட்டும் பிறப்புரிமையா?
சிறுபான்மை மக்களே... சிந்தியுங்கள்!
எம்.மகேஷ், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்லும் சிறுபான்மையினர் ஓட்டுகளை தடுத்து, சிந்தாமல் சிதறாமல் கைப்பற்ற, தி.மு.க., போடும் நாடகம் தான், திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம்!
சிறு குழந்தைகள் உணவு உண்ண மறுக்கும் போது, 'நீ சாப்பிடவில்லை என்றால், பேய் வந்து உன்னை துாக்கிட்டு போய் விடும்...' என்று தாய் பயமுறுத்துவது போல், 'தீபத்துாண் விவகாரத்தை நீங்கள் எதிர்க்கவில்லை என்றால், உங்களுக்கு ஆபத்து வரும்' என்று இஸ்லாமியரை பயம் கொள்ள வைத்து, அதன் வாயிலாக, தி.மு.க., பலனடைய நினைக்கிறது.
உண்மையில், ஹிந்துக்கள் மத சகிப்புத்தன்மை கொண்டவர்கள்; அவர்கள் அனைத்து மதத்தையும் மதிப்பவர்கள். அதனால் தான், இன்றும் வேளாங்கண்ணி மாத கோவிலிலும், நாகூர் தர்காவிலும் ஹிந்துக்கள் வழிபாடு செய்கின்றனர். இதுதான், ஹிந்துக்களுக்கு சனாதனம் போதிக்கும் தர்மம்!
அதே சகிப்புத்தன்மை பிற மதத்தினருக்கும் இருந்திருந்தால், இதுபோன்ற பிரிவினைவாதிகளுக்கு இங்கு வேலையே இருந்திருக்காது!
மக்களும், மதம் கடந்த மனித நேயத்துடன் இருந்திருப்பர்.
இனியும் சிறுபான்மை மக்கள் சுதாரித்துக் கொள்ளாவிட்டால், இந்த பிரிவினைவாதிகள் கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மை ஹிந்துக்களிடம் இருந்து உங்களை பிரித்து, தனித்தீவாக மாற்றி விடுவர். அவர்களுக்கு தேவை ஓட்டுகளே தவிர, உங்கள் நலன் அல்ல!

