PUBLISHED ON : டிச 23, 2025 03:34 AM

நவோதயா பள்ளிகளை எதிர்க்க காரணம் இது தான்!
எஸ்.கீதாஞ்சலி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'குமரி மகா சபா' என்ற அமைப்பு, 2017ல் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த ஒரு வழக்கிற்கு, 2025ல் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அந்த தீர்ப்பில், 'தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறப்பதற்கு வேண்டிய இடத்தை, தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும்; தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படக் கூடாது என்பதற்கான காரணமாக, தி.மு.க., - எம்.பி., வில்சன் எடுத்து வைத்த வாதம், இருமொழிக் கொள்கை என்பதே. நவோதயா பள்ளிகள் மூலம், மூன்றாம் மொழியாக, ஹிந்தி திணிக்கப்படும் என்றும், அதை எதிர்ப்பதாகவும் வில்சன் கூறினார்.
ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல!
கடந்த, 2006 வரை, தமிழகத்தில் சி.பி.எஸ்.இ, பள்ளிகள், வெறும் 50 எண்ணிக்கைகளில் மட்டுமே இருந்தன. பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலோ, கேந்திரீய வித்யாலயா பள்ளிகளிலோ சேர்க்க ஆசைப்பட்டனர்.
கேந்திரீய வித்யாலயா பள்ளியில், ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே எளிதில் அட்மிஷன் கிடைக்கும். வெளி நபர்கள் சேர விரும்பினால், ஒரு எம்.பி.,யின் சிபாரிசு கடிதம் தேவை. எனவே, ஏதாவது ஒரு எம்.பி.,யின் காலைப் பிடித்து, 10 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து, சிபாரிசு கடிதம் பெற்று, குழந்தைகளுக்கு சீட் வாங்க வேண்டிய நிலை நிலவியது.
இதை மோப்பம் பிடித்த தி.மு.க.,வினர், சில லட்சங்களைச் செலவு செய்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளைத் துவக்கினால் கோடிக்கணக்கில் வருமானம் பார்க்கலாம் என்று புரிந்து கொண்டு, அதற்கான வேலைகளில் இறங்கி வியாபாரத்தைப் பெருக்கினர்.
ஹிந்தி எதிர்ப்பு என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்தவரை வெறும் கண்துடைப்பே; தங்கள் பள்ளிகளில், ஹிந்தி வகுப்புகளை 'ஜாம் ஜாம்' என்று நடத்துகின்றனர்!
இப்போதைய எதிர்ப்புக்கான பின்னணி, நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் துவக்கினால், தங்கள் வியாபாரம் படுத்துவிடுமே என்ற ஆதங்கம் தானே தவிர, வேறொன்றுமில்லை!
மத்திய அரசு நிதியில் நடத்தப்படும் நவோதயா பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை தாய் மொழியிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்; ஒன்பதாம் வகுப்பு முதல், பிற மொழிகளும் சேர்க்கப்படுகின்றன; பிளஸ் 2 வரை, விருப்ப மொழிப் பாடமும் உண்டு; அனைத்துமே இலவசம்!
இத்தகைய வசதி இருப்பதால், மக்கள் அப்பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க அலைமோதுவர்; இது தான் ரகசியம்!
தீர்ப்பில் நீதிபதிகள், 'மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்; மாணவர்களின் எதிர்கால நலனை மட்டுமே முக்கியமாக எடுத்துக் கொள்ளுங்கள்' என்று அறிவுரை கூறியிருக்கின்றனர்.
மேலும், கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் கேரளாவிலும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகாவிலும், நவோதயா பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன. தமிழக மாணவர்கள் மட்டும், ஒரு சிறந்த கல்வி முறையை இழப்பதற்கு, இந்த திராவிட மாடல் அரசின் இருமொழி கொள்கை தடையாக இருக்கிறது.
தமிழக அரசு, 40 ஆண்டுகளாக தடுத்து நிறுத்தி இருக்கும் இந்த நவோதயா பள்ளிகளின் மூலம், ஆண்டுதோறும் குறைந்தது, 70,000 ஏழை மாணவர்களாவது பயன்பெற்று இருப்பர்.
தமிழக அரசுக்கு, மாணவர்களின் நலன் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, நவோதயா பள்ளிகளைத் திறப்பதில் முழு முனைப்பு காட்ட வேண்டும்!
நீதி தேவதையின் குழந்தைகளாக திகழுங்கள்! வி.கோபாலன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: கடந்த, 1947 - 1949ல், பேராசிரியர் ஒருவர் திருச்சி கல்லுாரி ஒன்றில் புதிதாக சேர்ந்த மாணவர்களிடையே ஒரு உரை நிகழ்த்தினார்.
தான், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் ஒரு, 'பிரதான்' என்றும், ஆர்.எஸ்.எஸ்.,சின் முக்கிய நோக்கம், தேவைப்பட்டவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வதே என்று கூறி, இயக்கத்தில் சேர விரும்புவோர், தங்கள் பெயரை பதிவு செய்யலாம் என்றார்.
மேலும், 'வாரத்தில் மூன்று நாட்கள், காலை, 8:00 முதல் அரை மணி நேரம் அணிவகுப்பு நடக்கும். அதில், 'என்னால் இயன்ற அளவு, தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்வேன்' என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இயக்கத்தில் இருக்க முடியவில்லை என்றால் விலகிக் கொள்ளலாம்' என்றார்.
அவருடைய பேச்சு, எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. என் பெற்றோரின் அனுமதி பெற்று, மறுநாளே இயக்கத்தில் சேர்ந்தேன். என்னைப் போல பல மாணவர்கள் சேர்ந்தனர். வழக்கம் போல் அணிவகுப்பு, உறுதிமொழி என, ஆறு மாதங்கள் கடந்தன.
ஒருநாள், கல்லுாரிக்கு அருகில் இருந்த குடிசைப்பகுதியில் தீ விபத்து. மற்ற குடிசைகளுக்கு தீ பரவும் முன் இதை தடுக்க வேண்டும் என, கல்லுாரி பேராசிரியர் அழைத்தார். நாங்கள் அனைவரும் அந்த குடிசைப்பகுதிக்கு ஓடிச்சென்று, கையில் அகப்பட்ட பாத்திரங்களை எடுத்துக் கொண்டு, அருகில் ஒரு சிறிய குளத்தில் இருந்து நீரை எடுத்து தீயை அணைக்க முயற்சி செய்தோம்.
அடுத்த அரை மணி நேரத்தில் தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து வந்தன; தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. அப்படியும் ஐந்து குடிசைகள் தீயால் அழிந்தன. அதில் வசித்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தனர்.
ஆர்.எஸ்.எஸ்., மாணவர்கள் அனைவரும், கல்லுாரி முதல்வரின் அனுமதி பெற்று, கல்லுாரி வளாகத்தில் அவர்களை தங்க வைத்தோம். எங்கள் சொந்த பணத்திலிருந்து அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தோம். அந்த நிகழ்ச்சி, 78 ஆண்டுகளுக்கு பின் இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.
இது போல, பல்லாயிரக்கணக்கான தொண்டுகளை, ஆர்.எஸ்.எஸ்., செய்து வருகிறது. அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை ஒரு தேச விரோத சக்தி என்று, சில அரசியல் தலைவர்கள் விமர்சிக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்.,சில் உள்ள எந்த நபருக்கும் குறுகிய மனப்பான்மையோ அல்லது வன்ம உணர்ச்சியோ கிடையாது. தங்களை தாக்குபவர்களுக்கும் உதவி செய்பவர்கள், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள்.
சமீபத்தில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், 'அந்த நீதிபதி ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளை பின்பற்றுபவர்' என்ற ரீதியில் பேசியிருந்தார். அவரது இந்த கருத்து, அபத்தத்தின் உச்சம்.
இவர் மாதிரியே இன்னும் சில ஓய்வு பெற்ற நீதிபதிகள், மக்கள் வரி பணத்தில் இருந்து ஓய்வு ஊதியம் பெற்று, அபத்தமாக பேசி வருகின்றனர்.
ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனேயே கருத்து தெரிவிப்பது, பொதுஜனங்களின் மனப்பான்மை. ஆனால், நீதிபதிகள், வக்கீல்கள், போன்றோர், படித்தறிந்தவர்கள். அவர்கள், மேம்போக்காக சில கருத்துக்களை, சர்ச்சைக்குரிய விதத்தில் வெளிப்படுத்தி தங்கள் மரியாதையை கெடுத்துக் கொள்கின்றனர்.
நீதித் துறையின் கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு, இவர்கள் இன்னும் ஆழ்ந்து சிந்தித்து, நீதி தேவதையின் குழந்தை களாகத் திகழ்வது நல்லது!

