தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: நவ. 9

இது உங்கள் இடம்: நவ. 9

இது உங்கள் இடம்: நவ. 9


PUBLISHED ON : நவ 09, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 09, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதியோரிடம் தபால் அலுவலகம் கறார் காட்டலாமா?

மு.பாலகிருஷ்ணன், சிவகங்கையில் இருந்து எழுது கிறார்: நான் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். நான் எழுதிய இரண்டு நுால்களை பார்சல் மூலம் மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு அனுப்ப விரும்பினேன்.

பார்சல் மேல், ‘அச்சடித்த நுால்கள்’ என்றும், ‘அச்சடித்த நுால்களை அனுப்புகிறேன்’ என்றும் சான்றளித்து, கையொப்பம் செய்திருந்தேன்.

கடந்த அக்., 22ல், சிவகங்கை காந்தி வீதியில் உள்ள கிளை தபால் நிலையத்திற்கு, என் பழைய மாணவர் வாயிலாக பார்சலை அனுப்பி வைத்தேன்.

‘வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதி இங்கு இல்லை; சிவகங்கை தலைமை தபால் நிலையம் சென்று அனுப்புங்கள்’ என்று, அங்குள்ள ஊழியர்கள் என் மாணவரிடம் கூறியுள்ளனர்.

அவரும் சிவகங்கை தலைமை தபால் நிலையம் சென்று பார்சலை கொடுத்துள்ளார்.

அங்கு பணிபுரிபவரோ, ‘பார்சல் அனுப்புவோர் நேரில் வர வேண்டும்; வரும்போது அவரது ஆதார் கார்டையும், சாட்சிக்கு மற்றொருவரும் ஆதார் கார்டுடன் வர வேண்டும். அவரது நேரடி பார்வையில் பார்சல் செய்தால் தான், பார்சலை ‘புக்’ செய்வேன்’ என்று சொல்லி, திருப்பி அனுப்பி விட்டார்.

என் வயதோ, 88; நடக்க முடியாமல் வீட்டில் இருக்கிறேன். என் நிலையை என் மாணவர் எடுத்துக்கூறியும், ‘விதி களின்படி தான், ‘புக்’ செய்வேன்’ என்று அந்த பணியாளர் மறுத்து விட்டார்.

தபால் நிலைய விதிமுறைகளை குறை கூறவில்லை. அதேநேரம், என் போன்ற தள்ளாத வயதில் இருப்போருக்கு பயன்படும் வகையில், அதன் விதிகளில் திருத்தம் செய்யலாம் அல்லவா?

இதே ஓர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வோ, எம்.பி.,யோ வெளிநாட்டுக்கு பார்சல்கள் அனுப்பும்போது, அவர்கள் நேரடியாக வந்து தான் பார்சல் செய்ய வேண்டுமென்று, தபால் அலுவலகத்தில் உள்ளோர் கண்டிப்பு காட்டுவரா?

விதிமுறைகள் அனைவருக்கும் சமம் தானே?

வயதானவர்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்து வந்து கொடுக்கும் சேவையை வங்கிகள் செய்து கொண்டிருக்கும் நிலையில், தபால் அலுவலகங்கள் இவ்வளவு கறார் காட்ட வேண்டுமா?

lll

செயற்கை தொழில் நுட்பம் எனும் வரப்பிரசாதம்!

எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: மருத்துவ ஆய்வு முதல், விண்வெளித் தொழில்நுட்பம் வரை இன்று, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு கால்பதிக்காத துறைகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.

அதேநேரம், இத் தொழில் நுட்ப வருகையால், உலகளவில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் அச்சமும் உருவாகியுள்ளது.

குறிப்பாக, தகவல்கள் பதிவீடு, வாடிக்கையாளர் சேவை, மொழிபெயர்ப்பு மற்றும் சில அடிப்படைக் குறியீட்டு வேலைகளை மனிதர்களை விட, ஏ.ஐ., மிக வேகமாகவும், துல்லியமாகவும் செய்வதால், பாரம்பரிய வேலைவாய்ப்பு சந்தை, பெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது.

மேலும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மற்றொரு ஆபத்தான முகமாக, போலித் தொழில்நுட்பம், ஒருவரின் முகம் மற்றும் குரலை அப்படியே போலி வீடியோக்களாக மாற்றி, சட்டம் – ஒழுங்குக்கும், தனிநபர் கண்ணியத்திற்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

அரசியல் தலைவர்களின் போலி உரைகள், போலியான ஆபாசக் காணொளிகள், சமூக அமைதியைக் குலைக்கும் ஆயுதங்களாக மாறக்கூடும் என்பதால், இதைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் தேவை.

செயற்கை நுண்ணிறவு தொழில் நுட்பம், மனித குலத்தின் வளர்ச்சிக்கும், நோய்களைக் குணப்படுத்துவதற்கும், பருவநிலை மாற்றத்தைக் கணிப்பதற்கும் ஒரு கருவியாக பயன்படுத்தினால், அது வரப்பிரசாதம். அதை தவறான வழிக்கு பயன்படுத்தினால், அதுவே மனித குலத்திற்கு சாபமாகவும் மாறும்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us