தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: நவ. 13

இது உங்கள் இடம்: நவ. 13

இது உங்கள் இடம்: நவ. 13


PUBLISHED ON : நவ 13, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரையானை வேகமாக அப்புறப்படுத்துங்கள்!

கே.ரங்கராஜன், சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘நம் ஆட்சிக் காலத்தில், 300 கோடி ரூபாய் செலவில், மிகப் பெரிய அறிவு நுாலகம் கட்டி விட்டோம்; நல்லாட்சி தந்து விட்டோம்’ என்று சொல்லி, சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ‘நுாலக பணிகள், தொண்ணுத்தி ஒன்பதே முக்கால் சதவீதம் நிறைந்து விட்டது’ என்று சொன்னார், திராவிட மாடல் ஸ்டாலின்.

ஆனால், அவருக்கு போதாத காலம், ஆட்சியே கவிழ்ந்து விட்டது.

காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக, விஜய் ஆட்சிப் பொறுப்பேற்றபின், தி.மு.க.,வின் ஒவ்வொரு ஊழலாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் ஊழல்; நகராட்சி நிர்வாகத் துறை, கே.என்.நேரு ஊழல், செந்தில் பாலாஜியின் மது விலக்கு துறை ஊழல், கனிம வளம், ஆற்று மணல், கல்குவாரி என, எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து, வழிந்தோடி ஆறாக பெருகுவதை, கண் முன்னே மக்கள் காண்கின்றனர்.

இவற்றை எல்லாம் விழுங்கித் தின்பது போல், இப்போது, கோவை ஈ.வெ.ரா., நுாலக ஊழல், மிளிர்ந்து ஜகஜ்ஜோதியாய் பிரகாசிக்கிறது.

எழுத்தாளர்கள் அனைவரும் நம் பக்கமே என்ற நினைப்பில் திராவிட மாடல் இருந்து விட்டதோ என்ற மிகப் பெரிய சந்தேகம் எழும் வகையில், நுாலக புத்தகங்கள் தேர்வு கமிட்டியினர் கண்ணில் மண்ணைத் துாவிய விவகாரம், மெத்த படித்த ஒரு எழுத்தாளர் வாயிலாகவே வெளிச்சத்துக்கு வந்துள்ளது, தமிழகத்திற்கு, ‘தலைதப்பியது தம்பிரான் புண்ணியம்’ என்பது போலாகி விட்டது.

தி.மு.க.,வினர் திணித்து வைத்துள்ள நுால்களைப் படிக்கும் இளைய சமுதாயத்தினர் எத்தகைய மாங்காய் மடையர்களாக மாற்றப்பட்டிருப்பர் என்று நினைத்தால், குலை நடுங்குகிறது.

இந்த கூச்சமோ, நாச்சமோ, அச்சமோ, குற்ற உணர்ச்சியோ எதுவுமின்றி, கிரீஸ் நாட்டுக்குக் கிளம்பிச் சென்றிருக்கிறார் ஸ்டாலின்.

தி.மு.க.,வின் மற்ற ஊழல்களை தற்போதைய முதல்வர் விஜய், தோலுறித்து உதறிக் காய வைத்து, துறைகளை சீர்படுத்துகிறாரோ இல்லையோ... இப்படி கரையான் புற்றாகி விட்ட நுாலகங்கள் அனைத்தையும், துார்வாறி, புதுப்பித்து, மேன்மைமிகு புத்தகங்களை வாங்கி அடுக்கி, இளைய சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டியது, அவசர அவசியமாகி விட்டது!



இன்னும் பல பூதங்கள் வெளியே வரலாம்!

வெ.சீனிவாசன், திருச்சியிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: மத்திய – மாநில அரசுகளின் உறவை ஆராய, கடந்த தி.மு.க., அரசால் ஏற்படுத்தப்பட்ட, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையிலான குழுவிற்கு, த.வெ.க., அரசு மூடுவிழா நடத்தியுள்ளது. இவ்விவகாரத்தைப் பற்றி விமர்சிக்கும் முன், அவரைப் பற்றிய சில முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

‘மத்திய பா.ஜ., ஆட்சியில், நீதித்துறை மட்டுமின்றி, தேர்தல் ஆணையம், கணக்குத் தணிக்கை வாரியம், மத்திய தேர்வு ஆணையம், ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வு அமைப்பு போன்ற, நாட்டின் முதன்மையான, அரசியல் சாஸன அமைப்புகளின் சுதந்திரம், நம்பகத் தன்மை, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

‘பார்லி., நீதி மன்றங்கள், தங்கள் கடமைகளை சரிவர செய்யாதபோது, மக்கள் தெருவுக்கு வந்து அமைதியான முறையில் போராட வேண்டியதுள்ளது’ என்று கூறி, உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக, நான்கு நீதிபதிகள், 2018 ஜனவரியில், பத்திரிக்கையாளர்களை சந்தித்து, அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் வெளிப்படைத் தன்மை இல்லை, மத்திய அரசின் தலையீடு இருக்கலாம் எனக் கூறினர்; அந்த நால்வரில் குரியனும் ஒருவர்.

நம் மாநிலத்தில், ஸ்டாலின் தலைமையிலான கடந்த தி.மு.க., அரசு, மத்திய- – மாநில அரசு உறவுகளைப் பற்றியும், மாநில சுயாட்சி பற்றியும் சீராய்வு செய்ய, நீதிபதி குரியன் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்தது.

தனக்கு, தன் கொள்கைகளுக்கு ஏற்ற பரிந்துரைகளை வழங்கக்கூடிய ஓய்வு பெற்ற நீதிபதிகளை, குழுக்களின் தலைவர்களாக நியமனம் செய்து கொள்வது, தி.மு.க.,வின் வழக்கம். மேற்கூறியவற்றிலிருந்து, குரியன் எத்தகைய பரிந்துரையை அளித்திருக்கக்கூடும் என்பதை, மக்கள் ஊகித்துக் கொள்ள முடியும்.

அரசியல் காரணங்களுக்காக தி.மு.க., அமைத்த, இந்த தேவையில்லாத வேலையை, த.வெ.க அரசு கலைத்துள்ளது நல்ல முடிவு; வர வேற்கப்பட வேண்டியது.

இதற்கு, தி.மு.க., உட்ப ட, அதன் தோழர்களாக இருந்த, காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டுகள், தி.க., – எஸ்.டி.பி.ஐ., உட்பட அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இக்கட்சிகள் அனைத்துமே, தி.மு.க.,வின் கொள்கைகளோடு ஒத்துப் போகக்கூடிய, மலிவு அரசியல் செய்யக் கூடியவை என்பதும், மக்கள் அறிந்ததே.

முதல்வர் விஜய், ‘மத்திய அரசோடு அனாவசியமாக சண்டை போட மாட்டோம்; இணக்கமாக இருந்து மாநில முன்னேற்றத்திற்காக செயல்படுவோம்’ என்று ஏற்கெனவே உறுதியாகக் கூறிவிட்டார்.

முந்தைய தி.மு.க., அரசின் அனைத்து விசாரணைக் கமிஷன்களையும், அதன் தலைவர்களையும், அவர்களின் பின்புலங்களையும், செயல்பாடுகளையும், தீர ஆய்வு செய்தால், பல பூதங்கள் வெளியே வரலாம்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us