PUBLISHED ON : நவ 08, 2025 12:00 AM

க.அருச்சுனன்,
செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'கூட்டணி கட்சி
ஓட்டுகள் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுகள் நீக்கப்படவிருப்பதாக பொய்
பிரசாரம் செய்து வருகிறது, தி.மு.க.,
'பீஹாரில், 64 லட்சம்
வாக்காளர்களை நீக்கிவிட்டனர். வாக்காளர்களின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது'
எனக் கூறுகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையமோ, 'வாக்காளர் பட்டியல்
சமர்ப்பிக்கப்பட்ட பின், ஒருவர் கூட தங்கள் ஓட்டு பறிக்கப்பட்டுவிட்டது
என்று கூறவில்லை' என தெரிவித்துள்ளது.
'இறந்தவர்கள், இரு
இடங்களில் ஓட்டுரிமை வைத்திருப்போர், இடம்மாறி சென்றோர் பெயர்கள் தான்
பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால், முதல்வரும் அவரது கூட்டணி
கட்சி தலைவர்களும் திரும்பத் திரும்ப ஒரே பொய்யை சொல்லிக்
கொண்டிருக்கின்றனர்...' என்று கூறியுள்ளார், பா.ஜ., தலைவரும், முன்னாள்
கவர்னருமான தமிழிசை.
கடந்த 21 ஆண்டுகளுக்கு முன், வாக்காளர்
பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் நடந்துள்ளது. அதன்பின் நடைபெறவில்லை.
அப்படியெனில், இந்த 21 ஆண்டுகளில் பல லட்சம் பேர் மரணமடைந்திருப்பர்;
ஆயிரக்கணக்கானோர் வேலை, திருமணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இடம்
பெயர்ந்திருப்பர்.
அவர்கள் பெயர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில்
நீக்கப்படாமல், அவை கள்ள ஓட்டுகளாக இதுவரை மடைமாற்றம் செய்யப்பட்டு
வந்துள்ளன என்பது, படிப்பறிவு இல்லாத பாமரருக்கு கூட புரியும் போது,
தி.மு.க.,வுக்கு ம் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் புரியாமல் இருக்குமா என்ன!
ஆனாலும், இவ்விஷயத்தில் முரண்டு பிடிக்க காரணம், கடந்த இரண்டு
ஆண்டுகளாக ஒரு பூத்துக்கு, 200 ஓட்டாவது அதிகம் இருக்க வேண்டும் என, ஒரு
தீவிர வாக்காளர் இயக்கத்தை நடத்தி முடித்து விட்டது, தி.மு.க.,
இந்நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் கொண்டு
வந்தால், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் ஓட்டு தி.மு.க.,விற்கு செல்வது
தடுக்கப்பட்டு விடும் என்ற பயமே, பதற்றத்திற்கு காரணம்!
எப்படியாவது இதை தடுத்து நிறுத்தி விட்டால், தங்கள் கணக்குபடி வரும்
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறது தி.மு.க.,
அதனால் தான், 'உச்ச நீதிமன்றம் செல்வோம்' என்கின்றனர்.
ஐ.நா., சபைக்கே சென்றாலும் இவ்விஷயத்தில் தி.மு.க.,வால் ஒன்றும் செய்ய முடியாது. நேர்மையாக தேர்தலை எதிர்கொள்வதை தவிர!
நீதிமன்றம் உத்தரவிடுமா?
கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் முடிந்த கதையாக, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் தம்பி, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், அரசு வங்கி ஒன்றில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.
அதை அடைக்க முடியாமல் காலம் தாழ்த்த, வங்கி அதிகாரிகள் காவல் துறைக்கு சொல்ல, அது எப்படியோ அமலாக்கத் துறைக்கு எட்ட, அவர்கள் எதையெதையோ தேட கடைசியில், தமிழ்நாடு தேர்வாணைய பணியாளர் துறையின், 888 கோடி ரூபாய் ஊழல் வெளிச் சத்திற்கு வந்துள்ளது.
லட்சக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் அரசு வேலை என்ற கனவை சுமந்து, டி.என்.பி. எஸ்.சி., தேர்வை பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் எழுதி வரும் நிலையில், பணம் வாங்கிக் கொண்டு, 2,538 பேர் அரசு பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.
முதல்வரின் கவனத்திற்கு தெரியாமலா இது நடந்திருக்கும்?
ஊழலுக்கான ஆதாரங்களை காட்டி, இவர்கள் மீது, எப்.ஐ.ஆர்., போடுங்கள் என்று அமலாக்கத் துறை சொன்னால், 'நாங்கள் என்ன தபால்காரரா?' என்று கேள்வி கேட்கிறது மாநில காவல் துறை.
இதற்கு பெயர் தான் திராவிட மாடலா?
ஊழல் செய்வதும், ஊழல்வாதிகளை பாதுகாப்பதற்கும் தான் அரசு உள்ளதா?
பணம் கொடுத்து அரசு வேலையில் சேருவோர், தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொதுமக்களிடம் கையூட்டு பெறுகின்றனர். இதனால், நாட்டில் லஞ்சம் அதிகரிக்கிறதே தவிர, அரசுப் பணிகள் நேர்மையாக நடை பெறுவதில்லை .
எனவே, நீதிமன்றம் தானாகவே, இவ்வழக்கை எடுத்து, நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி., தேர் வை ரத்து செய்து, புதிதாக சேர்ந்துள்ள பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு, மீண்டும் தேர்வு வைத்து, தகுதியானவர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
இதுதான் பணம் கொடுத்தவர்களுக்கு தண்டனையாகவும், புதிதாக தேர்வு எழுதுவோருக்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.
நீதிமன்றம் இதை செய்யுமா?
தினகரனின் குடும்ப சொத்தா அ.தி.மு.க.,?
என்.ராமகிருஷ்ணன், பழனியில் இருந்து எழுதுகிறார்:
'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, முதல்வராக ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவர் ஒரு நம்பிக்கை துரோகி' என்று கூறியுள் ளார், அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் தினகரன்.
அதுசரி... தினகரனுக்கும், அ.தி.மு.க.,விற்கும் என்ன சம்பந்தம்? ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அக்கா மகன் என்பதால், அ.தி.மு.க.,வை தங்கள் குடும்ப சொத்து என்று நினைத்து விட்டாரா தினகரன்?
ஜெயலலிதா மரணமடைந்த பின் வந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 20 ரூபாய்க்கு டோக்கன் கொடுத்து வெற்றி பெற்ற தினகரன், ஒரு நாளாவது சட்டசபைக்கு சென்று, தொகுதி மக்களுக்காக குரல் கொடுத்திருப்பாரா?
முதல்வரை தேர்ந் தெடுப்பது மக்கள் தான்; தினகரன் அல்ல!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தவறாக வழி நடத்தி, பல்லாயிரம் கோடிகளை சம்பாதித்து, அவர் சிறை செல்வதற்கு காரணமாக இருந்தவர்கள், இன்று பழனிசாமியை துரோகி என்கின்றனர்.
தினகரன் மகள் திருமணத்தில், இவரது வீட்டு பெண்கள் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வைர நகைகள் அணிந்து காட்சி தந்தனரே, அந்த பணம் எங்கிருந்து வந்தது? இவர் என்ன மன்னர் பரம்பரையா, டாட்டா, பிர்லா, அம்பானி போன்று பெரும் தொழில் அதிபரா அல்லது பரம்பரை பணக்காரரா?
சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு எப்படி அவ்வளவு சொத்து வந்தது?
ஜெயலலிதாவின் சொத்துகளை கொள்ளை அடிக்க, தன் அக்காள் மகன் சுதாகரனை, ஜெயலலிதாவிற்கு வளர்ப்பு மகனாக்கி, அவருக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்தி, மக்களின் வெறுப்புக்கு ஆளாகி, 1996ல் அ.தி.மு.க., ஆட்சியை இழக்க காரணமே சசிகலா தான்!
அதையெல்லாம் மறந்து பழனிசாமியை துரோகி என்கிறார், தினகரன்.
கடந்த தேர்தலில், அ.தி.மு.க.,வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தது யார்? வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை, பழனிசாமி மட்டும் முதல்வர் பதவியில் அமர்ந்து விடக் கூடாது என்று கங்கணம் கட்டுவது யார் என்று, தினகரன் சுயபரிசோதனை செய்தால், யார் அ.தி.மு.க.,வின் துரோகி என்பது தெரிந்து விடும்!

