PUBLISHED ON : செப் 21, 2026 01:02 AM

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தின் ஜிராம்காட்டி என்ற இடத்தில், 2013 மே 25ல் காங்., நிர்வாகிகள் சென்ற வாகனத்தை குறிவைத்து நக்சல்கள் தாக்கினர்.
அந்த தாக்குதலில் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உட்பட, 29 காங்கிரசார் கொல்லப்பட்டனர்.
காங்கிரஸ் நிர்வாகிகளை குறி வைத்து படுகொலை செய்த, 10 நக்சல்களுக்கு தற்போது, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
ஆனால், காங்., தலைவர்கள், 'நக்சலிசம்' குற்றமல்ல என்பது போல் பேசிவருவதுடன், தங்களை, 'அறிவுசார் நக்சல்கள்' என்றும் கூறிக் கொள்கின்றனர்.
மத்திய பா.ஜ., அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளால், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து, அரசிடம் சரணடைந்துள்ளனர்.
இதுகுறித்து, டில்லி செங்கோட்டையில், சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'ஆயுதமேந்திய நக்சல்களை ஒழித்து விட்டோம்; ஆனால், அறிவுசார் நக்சல்கள் இன்னும் நம்முடன்தான் இருக்கின்றனர்' என்றார்.
உடனே, 'நான் ஓர் அறிவுசார் நக்சலைட் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்' என, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து ராஜ்யசபா சுயேட்சை எம்.பி., கபில்சிபலும், தான் ஒரு அறிவுசார் நக்சல் என்பதில் பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.
ஆயுதம் ஏந்தாமல், நக்சல் சித்தாந்தங்களை எழுத்து மற்றும் பேச்சுக்கள் வாயிலாக நியாயப்படுத்துவோரை, 'அறிவுசார் நக்சல்' அதாவது, 'இன்டலக்சுவல் நக்சல்' என்று குறிப்பிடுவது உண்டு.
இந்த அறிவுசார் நக்சல்களின் வேலையே, அரசுக்கு எதிரான வன்முறை செயல்களை நியாயப்படுத்துவது தான்!
அவ்வகையில், 2013ல் நக்சல்களால் காங்கிரஸ் நிர்வாகிகள், 29 பேர் கொல்லப்பட்டதை கூட, அறிவுசார் நக்சல்களான சிதம்பரமும், கபில்சிபலும் வரவேற்பர் போலும்!
கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது வெளியில் நக்சல் சித்தாந்தங்களை நியாயப்படுத்தும் இந்த அறிவுசார் நக்சல்களின் கையில் நாடு போனால், இந்தியா வல்லரசு நாடாக மாறாது; பசியும், பஞ்சமும் தாண்டவமாடும் கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவாக தான் மாறும்!
மனித உயிர்களை காவு வாங்கும் ஆயுதம் ஏந்திய நக்சல்களை மத்திய அரசு ஒழித்து விட்டது; மனித மனங்களில் வன்முறையை திணிக்கும் அறிவுசார் நக்சல்களை அப்புறப்படுத்துவது மக்களின் கைகளில் தான் உள்ளது!
பெண்ணை மதிக்க கற்றுக் கொடுங்கள்!
முனைவர் செ.அ.ராகுல் கோல்டன், உதவிப் பேராசிரியர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஒவ்வொரு நாளும் செய்தித்தாள் மற்றும் காட்சி ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் தான் அதிகமாக வெளியாகின்றன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, விண்வெளியில் சாதனை படைக்கிறது; செயற்கை நுண்ணறிவில் முன்னேறுகிறது; உலக பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை நோக்கி செல்கிறது.
ஆனாலும், ஒரு பெண் பகல் நேரத்தில் கூட தனியாக நடந்து செல்ல முடியாத சூழல் தான் நிலவுகிறது.
கடந்த 2012-ல் டில்லியில், 23 வயதான மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் இறந்தார்.
நாடு முழுதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டன; கடுமையான தண்டனைகள் கொண்டு வரப்பட்டன; பெண்கள் பாதுகாப்பு குறித்து பல திட்டங்கள் அறிவிக்கப்பட்ட ன.
ஆனாலும், இன்று வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம், சட்டம் தாமதமாக செயல்படுவது, சாட்சிகள் மாறுவது, சமூக அழுத்தம், பாதிக்கப்பட்டவரின் மீது குற்றத்தை திசை திருப்பும் மனநிலை குற்றவாளிகளுக்கு தைரியத்தை அளிக்கின்றன.
இதற்கும் மேலாக, 'அவள் ஏன் அங்கு சென்றாள், ஏன் அந்த உடை அணிந்தாள், ஏன் இரவில் வெளியே சென்றாள்?' என்பது போன்ற கேள்விகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது எழுகின்றனவே தவிர, குற்றவாளி குறித்து இத்தனை கேள்விகள் எழுப்பப்படுவதில்லை!
சமூகத்தின் இந்த அவலமான சிந்தனை மாற வேண்டும். சிறுவயதில் இருந்தே பெண்களை மதிக்கவும், சமத்துவமாக நடத்தவும், அவர்களிடம் கண்ணியம் காக்கவும் பெற்றோர், உறவினர், பள்ளிகள் ஆண் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.
இதை செய்ய தவறும் பட்சத்தில், எந்தச் சட்டத்தாலும் பெண்களை பாதுகாக்க முடியாது!
பயணத்தை இனிமையாக்குங்கள்!
சி.ஷிவானி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பண்டிகை மற்றும் தொடர்ச்சியாக விடுமுறை வந்து விட்டால் போதும்; ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர்.
இந்த கட்டண கொள்ளை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதும், அதிகாரிகள் பேருக்கு சில பேருந்துகளில் ஆய்வு செய்து, அபராதம் விதித்து, நடவடிக்கை எடுப்பது போல் நடிப்பதும், அதைத் தொடர்ந்து பேருந்து உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட துறை அமைச்சருடன் பேச்சு நடத்துவதும் வழக்கம்.
அங்கு என்ன மாதிரியான பேச்சு நடக்குமோ தெரியாது; அதன்பின், அடுத்த சீசனில் தான் அதிகாரிகளின் சோதனை நடக்கும்.
இதுதான் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருவது!
சமீபத்தில், விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி, வழக்கம் போல் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை அமோகமாக நடந்துள்ளது. ஆனால், முன் எப்போதும் இல்லாத வகையில், மூன்று நாட்களில், 3,512 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டு, அதில், விதிமீறல்களில் ஈடுபட்ட, 639 பேருந்துகளுக்கு, மொத்தம், 30,77,243 லட்சம் ருபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது தான் என்றாலும் இவ்வளவு குறைவான அபராதம் விதித்தால், இப்பிரச்னைக்கு ஒருபோதும் தீர்வு ஏற்படாது.
எனவே, அபராத தொகையை அதிகப்படுத்துவதுடன், அடிக்கடி பேருந்துகளில் சோதனை நடத்த வேண்டும்.
தொடர் குற்றத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
முந்தைய தி.மு.க., ஆட்சியில் ஆம்னி பேருந்துகளுக்கு உரிமம் பெற லஞ்சம் வழங்கினர்; அதையே காரணமாக சொல்லி, பயணியரிடம் வசூல் வேட்டை நடத்தினர்.
தற்போது, த.வெ.க., ஆட்சியில் லஞ்சம் வாங்குவதில்லை எனும் போது, இவர்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவது எந்த வகையில் சரி?
எனவே, த.வெ.க., அரசு, இந்த விஷயத்தில் மக்களுக்கு துணை நின்று, ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து, மக்களின் பயணத்தை இனிமையாக்க வேண்டும்!
