PUBLISHED ON : செப் 23, 2026 12:00 AM

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்று, தெய்வத்திற்கும் மேலாக போற்றப்படுகின்றனர், ஆசிரியர்கள். ஆனால், கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர், 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அம்மாணவி பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து, இறந்து விட்டார்.
இதேபோன்று, தர்மபுரி அருகே காரிமங்கலம் அரசு மாதிரி பள்ளி கணித ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க, அம்மாணவியின் பெற்றோர் தர்மபுரி கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். தற்போது, அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார் .
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள ஓர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியர் மதன்குமார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், உடுமலை மகளிர் போலீசார் அந்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
இப்படி, வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே, மாணவியரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதை என்னவென்பது!
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று, இறைவனுக்கு நிகராக போற்றப்படும் ஆசிரியர்களே தறிகெட்டு போனால், மாணவர்களிடம் எப்படி ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்?
ஆசிரியர்கள், சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டுமாயின், ஆசிரியர்கள் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் இதுபோன்ற கழிசடைகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்!
-----
களையெடுக்க வேண்டும்!
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பாரத மாதா கி ஜே என கோஷமிட்டால், அதைக் கேட்டு சும்மா இருக்க நாங்கள் என்ன சொம்பா? ஸ்ரீவில்லிபுத்துாரில் வெடிகுண்டு வெடிக்கும் பார்த்துக்கங்க...' என்று, போலீசார் முன்பே மிரட்டல் விடுத்துள்ளனர், இரண்டு இளைஞர்கள்.
பாரத தேசத்தில் இருந்து கொண்டு, 'பாரத மாதா கி ஜே' என்றால், இந்த இளைஞர்களுக்கு எரிகிறது என்றால், அப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள். இவர்களை கைது செய்து, நம் வரிப்பணத்தில் சோறு போடுவதற்கு பதில், இதுபோன்ற நபர்களின் குடியுரிமையை ரத்து செய்து, நாட்டை விட்டு துரத்த வேண்டும்!
நாடு அற்று போக்கிடம் இல்லாமல் இருந்தால் தான், 'வீடு இல்லாமல் கூட இருந்து விடலாம்; நாடு இல்லாமல் வாழ முடியாது' எனும் நிதர்சனம் இவர்களுக்கு புரியும்!
உலகிலேயே, இஸ்லாமியர்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் ஒரு நாட்டில் வாழ்கின்றனர் என்றால், அது இந்தியாவில் மட்டும் தான்!
கம்யூனிச நாடு என்று சொல்லிக் கொள்ளும் சீனாவில், இஸ்லாமியர்கள், தங்கள் மத அடையாளத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல், ஒடுக்கப்பட்டு கிடக்கின்றனர்; மியான்மரில் அடித்து விரட்டப் படுகின்றனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீன போரின் விளைவாக, காஸாவில் ஒரு துண்டு ரொட்டிக்காக காத்துக் கிடக்கின்றனர்; பசிப்பிணியால் குழந்தைகள் மடிகின்றன. அண்டை நாடுகளோ, இவர்கள் தங்கள் நாட்டிற்குள் வந்துவிடக் கூடாது என்று, தங்கள் எல்லைகளை மூடுகின்றன.
அதனால் தான், 'இஸ்லாமிய நாடுகளில், அரச குடும்பத்தையோ, மதக்கோட்பாடுகளையோ எதிர்த்து பேசவோ, கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ முடியாது. ஆனால், இந்தியாவில் நாம், பிரதமரை கூட கேள்வி கேட்க முடியும்' என்று, இஸ்லாமிய மத போதகர் ஒருவர், சில மாதங்களுக்கு முன், இந்திய ஜனநாயகத்தை புகழ்ந்து பேசியிருந்தார்.
இந்த நிதர்சனத்தை உணர்ந்ததால் தான், இங்குள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள், 'இந்தியா எங்களது தாய்நாடு; இஸ்லாம் எங்களது வழிபாடு' என்று தேசப்பற்றுடன் வாழ்ந்து வருகின்றனர்.
அதேநேரம், சில பாகிஸ்தான் கைக்கூலிகளால், மதத்தை முன்னிறுத்தி, நாட்டிற்கு எதிராக மூளைச் சலவை செய்யப்படுவோரால், ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது.
இவை தடுக்கப்பட வேண்டுமாயின், அச்சமுதாய பெரியோர், தாங்களாகவே முன் வந்து, இதுபோன்ற இளைஞர்களை திருத்த வேண்டும்; நாட்டிற்கு எதிராக எவர் நடந்தாலும், அவர்களுக்கு எந்த விதத்திலும் ஆதரவு தரமாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
அதேநேரம், இஸ்லாமியர்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில், சம்பந்தப்பட்ட இளைஞர்களின் பேச்சை வழக்கம் போல், பா.ஜ.,வை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் கண்டிக்கவில்லை என்பது வெட்க கேடானது!
எனவே, 'வழக்குப்பதிவு செய்து விட்டோம்; அத்துடன் கடமை முடிந்துவிட்டது' என்று காவல் துறை அலட்சியமாக இருக்காமல், இவர்களுக்கு பின் உள்ள தேசவிரோத சக்திகளை கண்டறிந்து களை எடுக்க வேண்டும்!
------
ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்!
க.சண்முகசுந்தரம், லட்சுமிபுரம், பொள்ளாச்சியில் இருந்து எழுதுகிறார்: பழைய ஓய்வூதிய திட்டம், 20௦3க்கு முன் பணியில் சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே நடைமுறையில் உள்ளது.
கடந்த 1971ல் ஆசிரியராக பணியில் சேர்ந்த என்னைப் போன்றோருக்கு, அப்போது, வெறும் சில நுாறு ரூபாய் மட்டுமே சம்பளம்!
அடிப்படை சம்பளம் மட்டுமே உரிமை ஊதியமாக இருந்தது; தற்போது அகவிலைப்படி என்று சொல்லக்கூடிய பஞ்சப்படி உயர்வு, அப்போதெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை தமிழக அரசு வழங்க கூடியதாகவும், அதுவும், 10 சதவீதம் என்ற அளவில் தான் இருந்தது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் தான், மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும் போதெல்லாம், தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டார்.
அதன்பிறகே, எங்களுக்கு படிப்படியாக சம்பள உயர்வு கிடைத்தது. தமிழகத்தில், 6வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட பின் தான், வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ப சம்பளம் கிடைத்தது.
கடந்த 2006ல் நான் பணி ஓய்வு பெற்று விட்ட காரணத்தால், அடிப்படை ஓய்வூதியம், 11 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் தான் இருந்தது.
தமிழகத்தில் தற்போதைய ஓய்வூதிய நடைமுறைப்படி, ஓய்வு பெற்றவர்கள், 80 வயதை பூர்த்தி செய்தால் தான், 20 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும்.
இதில் கொடுமை என்னவென்றால், 80 வயதை கடப்பதற்கு முன், 55 சதவீத ஓய்வூதியர்கள் இறந்து விடுகின்றனர்.
எனவே, தற்போது தமிழகத்தை ஆட்சி செய்யும் முதல்வர் விஜய், 70 வயது நிரம்பிய ஓய்வூதியருக்கு, 10 சதவீதமும், 75 வயது - 15 சதவீதமும், 80 வயது - 20, 85 வயது - 25, 100 வயது நிரம்பியோருக்கு, 50 சதவீதமும் ஊதிய உயர்வு வழங்க ஆவண செய்ய வேண்டும்!
