PUBLISHED ON : ஜன 24, 2026 05:45 AM

எஸ்.கந்தசாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கவர்னர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகளை பார்லிமென்டில் தி.மு.க., முன்னெடுக்கும்' என தெரிவித்துள்ளார், திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின்.
'மக்கள் பேராதரவுடன் ஆட்சி அமைத்துள்ள அரசு எடுக்கும் முடிவுகளுக்கு, ஒத்துழைப்பவராக கவர்னர் இருக்க வேண்டும். ஆனால், கவர்னர் ரவி அதற்கு மாறாக செயல்படுகிறார்' என்றும் கூறியுள்ளார்.
அப்படிப் பார்த்தால், தமிழக மக்கள் எட்டு கோடி பேரும் ஒரு மனதாக ஓட்டளித்து, தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்யவில்லை. 2021 தேர்தலில், 42 சதவீத மக்களின் ஓட்டுகளை பெற்று தான் ஆட்சியில் அமர்ந்துள்ளது, தி.மு.க.,
மீதம் உள்ள, 58 சதவீதம் பேர், தி.மு.க., வுக்கு எதிரான மனநிலையில் தான் இன்றளவும் உள்ளனர். அதனால், 'தமிழகத்திற்கு முதல்வரே தேவையில்லை; கவர்னரே போதும்' என்றால், அதை திராவிட மாடல் முதல்வர் ஏற்றுக் கொள்வாரா?
முதல்வர் இல்லாமல், அவரது அமைச்சரவை இல்லாமல், நாட்டில் நிர்வாகம் நடந்திருக்கிறது; நடக்கும். ஆனால், கவர்னர் இல்லாமல் நிர்வாகம் நடந்திருக்கிறதா? நடக்காது; ஸ்தம்பிக்கும்!
அதனால் தான், மாநில கவர்னர் சுகவீனம் அடைந்தாலோ, மரணமடைந்தாலோ உடனடியாக பக்கத்து மாநில கவர்னரை கூடுதல் பொறுப்பாக, சம்பந்தப்பட்ட மாநில நிர்வாகத்தையும் கவனித்து கொள்ளுமாறு உத்தரவிடுகின்றனர்.
அதேநேரம், ஒரு முதல்வர் உடல் நலம் குன்றினாலோ அல்லது மரணமடைந்தாலோ, பக்கத்து மாநில முதல்வரை கூடுதலாக, இந்த மாநிலப் பொறுப்பையும் கவனித்து கொள்ளச் சொல்லி, எவராலும் உத்தரவிட முடியாது.
சரி... கவர்னர் உரை தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை யாருக்கு அனுப்பி வைக்கப் போகிறார் முதல்வர்?
ஜனாதிபதிக்கே அனுப்பினாலும், அதை கவர்னருக்குத் தான் அவர் திருப்பி அனுப்பி வைப்பார்.
அதேநேரம், 58 சதவீத மக்கள், ஓட்டுப்பதிவு நாளன்று, ஓட்டுச்சாவடிக்கு சென்று, 'இந்த முதல்வர் எங்களுக்கு தேவையில்லை' என்று ஓட்டளித்தாலே போதும்; முதல்வர் அதிகாரம் பறிபோவதுடன், சட்டசபைக்குள் கூட நுழைய விடாமல் செய்து விடுவரே!
எனவே, ஆட்சி அதிகாரம் என்பது காத துாரத்திற்கு தானே ஒழிய, நிரந்தரமல்ல என்பதை, திராவிட மாடல் முதல்வர் தனக்குத் தானே உருவேற்றிக் கொண்டால், இதுபோன்று உளற மாட்டார்!
----
அகப்பட்ட காங்கிரசுக்கு அஷ்டமத்தில் சனி!
ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, ' இ -மெயில்' கடிதம்: தி.மு.க.,வுடன் தான் கூட்டணி என முடிவு எடுக்கப்பட்டால், வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றுவரா என்பது சந்தேகமே!
காரணம், நடிகர் விஜயின், 'ஆட்சியில் பங்கு' என்ற அஸ்திரம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது. தி.மு.க.,வுடன் கூட்டணி என்றால், அக்கட்சி கொடுக்கும் தொகுதிகளை தான் சலாம் அடித்து வாங்கிக் கொள்ள வேண்டும். அதேநேரம் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி என்றால், 60 சீட்டுகளும், அமைச்சர் பதவியும் கிடைக்குமே!
ஆட்சியில் பங்கு பெற்று அதிகாரத்தை ருசித்துவிட துடிக்கின்றனர், தமிழக காங்கிரசார். அவர்கள் ஆசை நெருப்பில் குடம் குடமாய் நீரை ஊற்றியது போல், சமீபத்தில் டில்லியில் நடந்த காங்., செயற்குழு கூட்டத்தில், 'கூட்டணி அரசில் பங்கு கேட்க வேண்டாம்' என்று முடிவு செய்து தமிழக காங்.,கிற்கு கசப்பு மருந்து கொடுத்துள்ளது, அக்கட்சி மேலிடம்.
தலைமையும் என்ன தான் செய்யும்... ஏற்கனவே, அடி மேல் அடியாக ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியை மட்டுமே பரிசாக பெற்று வரும் நிலையில், அதிக எம்.பி.,க்களை வைத்துள்ள தி.மு.க.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்டால், அது, 'இண்டி' கூட்டணியை இன்னும் பலவீனப்படுத்தி விடுமே!
அதேநேரம், நடிகர் விஜயின், ஜனநாயகன் திரைப்பட தணிக்கை தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைசி நிமிடம் கூட முடிவு மாறலாம் என்பதை தி.மு.க.,விற்கு சூட்சுமமாக உணர்த்தியுள்ளார், காங்., 'நிழல்' தலைவர் ராகுல்.
எது எப்படியோ, 39 தொகுதிகளுக்காக தி.மு.க.,வின் காலை பிடித்து கொண்டிருக்கும் தங்களுக்கு, த.வெ.க., 60 தொகுதிகளை கொடுக்க முன்வந்தும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடுமோ என்ற ஏக்கத்தில், தலைமையின் இறுதி முடிவிற்காக தமிழக காங்., எதிர்பார்த்துள்ளது.
இப்படி ஆசை எனும் அலையில் ஓடம்போல் ஆடிக் கொண்டிருக்கிருக்கும் தமிழக காங்கிரசார் ஒரு விஷயத்தை மறந்து விட்டனர்.
தி.மு.க., 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று சொன்னாலும், த.வெ.க., வரவால், 100 தொகுதிகளை கைப்பற்றுமா என்பதே சந்தேகம் தான். 'அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி' என்பது போல், தி.மு.க., ஆட்சியின் மீதான எதிர்ப்பு அலைக்குள், அக்கட்சின் கூட்டணியில் இருக்கும் காங்.,கால் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்று விட முடியும்?
எனவே, தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், த.வெ.க.,வுடன் கூட்டணி வைத்தாலும், காங்.,கிற்கு பெரிதாக வெற்றி வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனம்!
----
கண் கெட்ட பின் சூரிய தரிசனம் தேவையா?
ஆர்.சத்தியநாராயணமூர்த்தி, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உடல் எடையை குறைப்பது, கூட்டுவது, முடியை கருமையாக்குவது, நிறத்தை அதிகரிப்பது எப்படி என, சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட தகவல்கள் வெளிவருகின்றன.
இவற்றைப் பார்த்து, இளம் தலைமுறையினர் விஷப் பரிட்சையில் இறங்குகின்றனர். சமீபத்தில், உடல் எடையை குறைக்க யு - டியூப் பார்த்து மருந்து உட்கொண்ட கல்லுாரி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பலநுாறு ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ, எப்போது எழ வேண்டும் என்பதிலிருந்து எப்போது உண்பது, உறங்குவது, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது குறித்து பல்வேறு வழிமுறைகளை வகுத்துக் கொடுத் துள்ளனர், நம் முன்னோர்.
அவை எவற்றையும் கடைப்பிடிக்காமல், கட்டுப்பாடு இல்லாமல் கண்ட நேரத்தில் உண்டும், உறங்கியும், விழித்தும் என்று உடலைக் கெடுத்து, உடலின் இயக்கம் நம் கட்டுப்பாட்டை மீறும்போது, அப்போதும் கூட மருத்துவமனைக்கு சென்று, உரிய மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல், இதுபோன்று, யு - டியூப் பார்த்து சுயமருத்துவம் செய்து கொள்வதை என்னவென்பது?
இன்னும் சிலர் இளமையில் இஷ்டம் போல் வாழ்ந்துவிட்டு, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல், வயதானபின் உடல்நலம் பேணுவதில் அக்கறை கொள்கின்றனர்.
சிறு வயது முதல், அதிகாலையில் எழுந்து வியர்வை சிந்தும்படி உழைத்தோ, உடற்பயிற்சியோ செய்து உடலை பலப்படுத்தாமல், முதிர்ந்த வயதில் திடீரென உடற்பயிற்சி செய்து என்ன பலன்?
எனவே, 'உணவே மருந்து; ஊண் உடலே ஆலயம்' என்பதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து, நம் முன்னோர் காட்டிய வழியை சிறுவயதில் இருந்து பின்பற்றி வாழ்ந்தால், நோயற்ற வாழ்வுடன், கட்டுக்கோப்பான உடல் வனப்பையும் பெறலாம்!

