/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஐந்தறிவு ஜீவன்களுக்கும் மரியாதை!
/
ஐந்தறிவு ஜீவன்களுக்கும் மரியாதை!
PUBLISHED ON : பிப் 09, 2024 12:00 AM

கே.எஸ்.தியாகராஜ பாண்டியன், காரைக்குடியில் இருந்து எழுதுகிறார்: மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் நம், 'தினமலர்' நாளிதழ் புதிதாக, 'செல்லமே' என்ற பகுதியை சனிக்கிழமை தோறும் வழங்கி வருகிறது. ஆறறிவு படைத்த மனிதர்கள் படிக்கும் பத்திரிகையில், ஐந்தறிவு ஜீவன்களுக்காக ஒரு பக்கம் ஒதுக்கியுள்ள, 'தினமலர்' நாளிதழின் செயல் மன நெகிழ்வை தருகிறது. இதை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...' என்று திருவள்ளுவரும், 'காக்கை குருவி எங்கள் ஜாதி...' என்று பாரதியும், 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரும், ஜீவகாருண்யத்தை சனாதன தர்மத்தின் ஒரு அங்கமாக பாவித்து வந்தனர்.
அதனால் தான் இறை வழிபாட்டில் கூட, சிங்கம், புலி, யானை, குதிரை, நாய், பசு போன்ற அனைத்து உயிர்களையும்,கடவுளின் வாகனமாக சன்னிதிக்கு அருகில் சிலையாக வைத்து வழிபடுகிறோம். இந்த பூமியானது மனிதருக்கு மட்டும் சொந்தமல்ல; கோடிக்கணக்கான ஜீவராசிகளுக்கும் சொந்தமானது.
மனச்சோர்வுக்கு மிக சிறந்த மருந்து, செல்லப் பிராணி வளர்ப்பு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
'செல்லமே' பகுதி வெற்றியடைய வாழ்த்துக்கள். தொடரட்டும் தினமலர் நாளிதழின் ஆத்மார்த்த சேவை!
---
காந்தியின் பங்களிப்பை மறைக்க முடியாது!
வி.கோபாலன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: தமிழக கவர்னர் ரவி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தின விழாவில் பேசுகையில், அவரை வெகுவாக பாராட்டி பேசியது, மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயத்தில் கவர்னர், 'இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு காரணம், சுபாஷ் சந்திர போஸ் தான்; காந்திஜி அல்ல' என்று கூறியது தவறு; சரித்திர உண்மைக்கு மாறானது.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு உண்மையான காரணம், மகாத்மா காந்தியின் தலைமையும், அவரது அகிம்சை போராட்டமும் தான். அதற்கு சான்றாக சில சரித்திர உண்மைகள்...
இரண்டாம் உலக போர் நடந்த காலத்தில், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், அவரது மனைவி எலினார் ரூஸ்வெல்ட் இருவரும் இந்தியாவின் மீதும், இந்திய மக்கள் மீதும் பாசமும், பிரியமும் கொண்டவர்கள்.
அப்போதைய பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். அவர், இந்திய தலைவர்களின் சம்மதம் கேட்காமல், இந்தியாவை இரண்டாவது உலகப் போரில் ஈடுபடுத்தினார். சர்ச்சிலின் இந்த செயலை கண்டித்து, காங்கிரஸ் கட்சி, காந்தியின் தலைமையின் கீழ், ஒத்துழையாமை இயக்கத்தை தீவிரமாக பிரசாரம் செய்தது; இந்தியாவே கொந்தளித்தது.
அப்போது, அமெரிக்கஜனாதிபதி ரூஸ்வெல்ட், சர்ச்சிலிடம் யுத்தம் முடிந்தஉடன் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குமாறு அழுத்தமாக கூறினார். அப்போதைய இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஜார்ஜும், சர்ச்சிலிடம் இதே கருத்தை வலியுறுத்தினார். சர்ச்சிலும் தலையாட்டியதாக தகவல்.
கடந்த 1944ல், இரண்டாவது உலக யுத்தம் முடிந்த உடன், 1945ல் இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் சர்ச்சிலின் கட்சி தோற்று, அவர் பதவி இழந்தார். தொழிலாளர் கட்சி ஜெயித்து, கிளமென்ட் அட்லி பிரதமர் ஆனார். இதற்கிடையில், யுத்தத்தின் முடிவில் இங்கிலாந்தின் பொருளாதாரம் மிகவும் சீர் குலைந்திருந்தது.
அதே சமயத்தில், இந்தியாவில் சுதந்திர போராட்டம், காந்திஜியின் தலைமையில் உச்சக்கட்டத்தில் இருந்தது இதை சமாளிக்க முடியாமல், இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கும் எண்ணத்துடன், இந்திய தலைவர்களுடன் பேச இரண்டு துாது குழுக்களை பிரிட்டன் அரசு அனுப்பியது.
இந்த குழுக்கள் காந்திஜி உள்ளிட்ட இந்திய தலைவர்களுடன் தொடர்ந்து நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின், 1947 ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு தனி நாடு ஆயிற்று. ஆக., 15ல் இந்தியா சுதந்திரம் பெற்றது.
இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு முக்கிய காரணம், காந்திஜியின் தலைமைப் பண்பும், அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் தான். இது சரித்திர உண்மை. இதை யாராலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது.
---
நடிகர்கள் கட்சியின் பின்னணி என்ன?
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் திரை உலகை சேர்ந்தவர்களுக்கு, தமிழக அரசியல் மீது மோகம் அதிகம். அரசியலில் குதித்து, ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டவர்கள், 'புலியை பார்த்து பூனை சூடு போட்டது' போலானது தான் மிச்சம். 'எம்.ஜி.ஆர்., சினிமா வாயிலாக அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடித்தது போல், நாமும் ஆட்சியை பிடிக்கலாம்' என நினைத்து, பலரும் அரசியலில் குதித்தனர், குதிக்கின்றனர்.
தமிழ் திரையுலக ஜாம்பவான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவங்கி பாக்யராஜ், ராஜேந்தர், கமல், சரத்குமார் என பட்டியல் தொடரும். இதில், கேப்டன் விஜயகாந்த் தே.மு.தி.க.,வை துவக்க, அவருடைய திருமண மண்டபத்தை ஆளுங்கட்சி இடித்ததே முதன்மையான காரணமாக இருந்தது. அடுத்து ரஜினிகாந்த், 'நான் வருவேன்; ஆனா, எப்போ வருவேன் எப்படி வருவேன் என்பது ஆண்டவனுக்கு தான் தெரியும். என் வழி தனி வழி' என்றெல்லாம், 'பில்டப்' கொடுத்தவர், கடைசியாக, 'அரசியல் வேண்டாம்; ஆளை விடுங்க சாமி' என, ஒதுங்கி விட்டார்.
அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியலில் குதித்தார். இவர் நடித்த படம் ஒன்று வெளிவருவதில் பிரச்னை வர, 'இந்த நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழி இல்லை' என புலம்பியவர், அரசியல் வாயிலாக, தனக்கொரு பாதுகாப்பு அரணை தேடியபடியே இருக்கிறார்.
அதேபோல, நடிகர் விஜயும் இப்போது அரசியலில் குதித்துள்ளார். இவரது பல படங்கள் வெளியீட்டின்போது அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., அரசால் பல இடையூறுகளை சந்தித்ததே, தற்போது அரசியல் கட்சி வரை அவரை இழுத்து வந்துள்ளது.
இப்படி நடிகர்கள், தங்களுக்கு வரும் சொந்த பிரச்னையை தடுக்க, எதிரிகளை பயமுறுத்த, ரசிகர்களை கேடயமாக பயன்படுத்த, அரசியல் கட்சி என்ற அமைப்பை உருவாக்குகின்றனர். மேலும், பிரபல நடிகர்களின் ரசிகர் பலத்தை தங்கள் கட்சிக்கு ஆதரவாக திருப்ப வேண்டும் என, சில பெரிய அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்யும் போது, நடிகர்கள் இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.
இதை, ரசிகர்களுக்கு நேரடியாக பகிரங்கமாக சொல்ல முடியாமல், கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு தருவது போல, கருப்பு சிவப்பு சைக்கிளில் ஓட்டளிக்க நடிகர் விஜய் சென்றது ஒரு உதாரணம்.
இப்படி, மற்ற கட்சிகளுக்கு பயப்படுவதற்கு பதில் நாமே கட்சி துவங்கினால் என்ன என்ற யோசனையின் வெளிப்பாடே, நடிகர் விஜயின் அரசியல் கட்சி. இது, அரசியல் வானில் ஜொலிக்குமா அல்லது மின்மினி பூச்சியாக மின்னி மறையுமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

