PUBLISHED ON : ஆக 16, 2025 12:00 AM

வி.கோபாலன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிேஷகம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, 'கோவில் நிர்வாகிகள் எனக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை' என்று மனம் குமுறி அறிக்கை வெளியிட்டார். உடனே, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, செல்வப்பெருந்தகைக்கு ஆறுதல் கூறி, இதற்கு காரணமான கோவில் நிர்வாகிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, ஹிந்துக்களை வசைபாட கிடைத்ததே ஒரு சந்தர்ப்பம் என்று எண்ணி, சில அரசியல் கட்சி தலைவர்கள் செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக, ஜால்ரா தட்டினர்.
இதேபோன்று, 1965ல் தமிழகத்தில் பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. காங்., கட்சியை சேர்ந்த அப்போதைய மத்திய ரயில்வே துணை அமைச்சர் அழகேசன், பணி நிமித்தமாக திருநெல்வேலி சென்றிருந்தவர், பின், சுவாமி தரிசனம் செய்ய திருசெந்துார் கோவிலுக்கு சென்றார்.
அர்ச்சகர்கள் முருகனுக்கு தீபாராதனை காட்டிய பின், கோவில் வழக்கப்படி விபூதி பிரசாதத்தை ஒரு வில்வ இலையில் வைத்து, அமைச்சர் கைகளில் விழுமாறு போட்டனர்.
அழகேசனுக்கு வந்ததே கோபம். மத்திய துணை அமைச்சரான தன்னை அர்ச்சகர்கள் அவமானப்படுத்தி விட்டதாக கூறி, கோவில் நிர்வாகத்தையும், அர்ச்சகர்களையும் தாக்கி ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அவரது அறிக்கை மறுநாள் காலை எல்லா நாளிதழ்களிலும் வெளியானது. அறிக்கையை படித்த முதல்வர் பக்தவத்சலம், மத்திய துணை அமைச்சருக்கு ஆறுதல் கூறவில்லை; மாறாக, கண்டன அறிக்கை வெளியிட்டார்.
அதில், 'ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு மரபு, வழக்கம் உண்டு. கோவிலுக்கு இறைவனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் அந்த மரபை மதித்து நடக்க வேண்டும். இறைவன் சன்னிதியில் நிற்கும்போது, பக்தன் என்பது தான் மனதில் இருக்க வேண்டுமே தவிர, தான் வகிக்கும் பதவி இருக்கக் கூடாது; அது உண்மையான பக்தியும் இல்லை. அழகேசன் திருச்செந்துார் கோவில் மரபுக்கு மரியாதை கொடுத்து இருக்க வேண்டும். அதை மீறி அவர் செயல்பட்டதற்கு, அவரை நான் கண்டிக்கிறேன்...' என்று குறிப்பிட்டிருந்தார்.
இத்தனைக்கும், முதல்வரான பக்தவத்சலம் ஹிந்து அறநிலையத் துறை பொறுப்பையும் தன் வசம் வைத்திருந்தார்.
ஆனால், இன்றோ கோவிலுக்கு செல்லும் அரசியல்வாதிகள், கோவில் மரபுகளை மதிப்பதில்லை. உலகையே கட்டிக் காப்பது போல் ஓர் இறுமாப்புடன், கடவுளுக்கு இணையாக தங்களையும் மூலஸ்தானத்தில் வைத்து, ஆராதனை செய்ய வேண்டும் என்ற அளவிற்கு எதிர்பார்க்கின்றனர்.
எல்லாம் அதிகாரம் கையில் இருக்கும் ஆணவம்!
கோமாளி வரிசையில் இடம் பிடிக்கும் கமல்! வி.வாசன், திருச்சியி ல் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சட்டசபை தேர்தலில் ஓர் இடத்தில் கூட
வெற்றி பெற முடியாத நடிகர் கமல்ஹாசன், தி.மு.க.,வின் தயவால், தற்போது
ராஜ்யசபா எம்.பி., ஆகிவிட்டார்.
அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும்
தொண்டர்களில் பெரும்பாலானோர், 'இது ஏட்டுச் சுரைக்காய்; கறிக்கு உதவாது'
என்பது புரிந்து, கூடாரத்தை காலி செய்து, பிற கட்சிகளுக்கு போய் விட்டனர்.
தி.மு.க.,வினரும், 'கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் இருக்கையில், இவருக்கு
ஏன் பதவி கொடுக்க வேண்டும்?' என்ற புகைச்சலில் தான் இப்போது வரை
இருக்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் சூர்யாவின்,
'அகரம் பவுண்டேஷன்' ஏற்பாடு செய்திருந்த விழாவில் பேசும்போது, 'கல்வி
மட்டும் தான், சனாதன தர்மத்தை ஒழிக்கக்கூடிய ஆயுதம்' என்றும், 'நீட்'
தேர்வுக்கு எதிராகவும் பேசியுள்ளார்.
பேச்சு சுதந்திரம் என்ற
பெயரில் ஹிந்து விரோத கருத்துகளைப் பேசியதால் தான், துணை முதல்வர் உதயநிதி
மீது வழக்கு தொடுக்கப்பட்டு, நீதி மன்றத்தின் கண்டிப்புக்கு ஆளானார்.
மேலும், நடிகர் சூர்யா குடும்பத்தினர் இப்போது கோவில் கோவிலாக சுற்றி
வருவதை கமல் அறியவில்லையா?
'நீட் தேர்வை ஒழிப்போம்' என்று கூறி
ஆட்சியை பிடித்தவர்களின் தயவால், எம்.பி., ஆகியுள்ள இவர், தி.மு.க.,விடம்
கேட்டிருக்க வேண்டும்... 'அடுத்த தேர்தலும் வரப்போகிறதே... எப்போது நீட்
தேர்வை ரத்து செய்வீர்கள்?' என்று!
தனியார் மருத்துவக்
கல்லுாரிகளின் கொள்ளையை தடுக்கவும், மருத்துவ படிப்பில் தகுதி, திறமையை
உறுதி செய்யவும் நீட் நுழைவுத் தேர்வு தான் உதவியாகவே உள்ளது. ஜாதி, மத
பேதமின்றி, நன்றாகப் படித்த அரசு பள்ளி மாணவர்கள் பலர், இன்று நீட்
தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர்களாகி உள்ளது கமலுக்கு தெரியாதா?
கமல்ஹாசன் இப்போது ராஜ்யசபா உறுப்பினர். சினிமாவில் பேசுவது போல்
தத்துபித்து என்று உளறுவதும், தரம் தாழ்ந்து பேசுவதும், சிறுபான்மையினரை
திருப்திபடுத்த பெரும்பான்மையினர் மனம் புண்படும்படி பேசுவதை தவிர்த்து,
பொறுப்புடன் பேச வேண்டும்.
இல்லையெனில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் போன்று கமலுக்கும் கோமாளிகள் வரிசையில் தான் இடம் கிடைக்கும்!
விரைவான தீர்ப்பு பகற்கனவே! ஆர்.பிச்சுமணி, சென்னையில் இருந்து அனுப்பிய,
'இ - மெயில்' கடிதம்: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி சூதாட்ட வழக்கு
தொடர்பாக, தொலைக்காட்சி விவாதத்தில் தன் மீது அவதுாறு கருத்துகள் கூறியதாக
ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத்குமார் உட்பட அதை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி
நிறுவனங்கள் மீது, 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொ டர்ந்தார்,
கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி.
சென்னை உயர் நீதிமன்றத்தில்
2014ல் தொடரப்பட்ட இவ்வழக்கு, 11 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும்
நிலையில், தற்போது, தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய, வழக்கறிஞர் ஆணை
யரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, 11
ஆண்டுகள் கழித்து இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது முடிந்தவுடன்
வழக்கு விசாரணைக்கு வரும். விசாரணை நடத்தி தீர்வு வர இன்னும் எத்தனை
ஆண்டுகள் ஆகும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்!
நம் நீதி துறையின்
செயல்பாடு, இப்படி நத்தை வேகத்தில் நகர்ந்தால், சிவில், கிரிமினல்
குற்றங்கள் செய்யும் அரசியல்வாதிகளின் வழக்குகள் முடிய, 100 ஆண்டுகளுக்கும்
மேல் ஆகும் போல் உள்ளது. அதனால் தான், எந்த ஒரு அரசியல்வாதியும் வழக்கு
குறித்து கவலைப்படுவதில்லை.
மேலும், எளிதாக சாட்சிகளை பணம் கொடுத்து வாங்கி, வழக்கை தங்களுக்கு சாதகமாக மாற்றி விடுகின்றனர்.
தீர்ப்பு வழங்குவதில் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போல் இல்லாமல், தென்
கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளைப் போல், ஆறு மாதத்திற்குள் விசாரணை முடிந்து
தண்டனை வழங்கினால் குற்றங்கள் வெகுவாக குறையும். குறிப்பாக
அரசியல்வாதிகள் தவறு செய்ய பயப்படுவர்.
ஆனால், நீதிமன்ற செயல்பாடுகளே கேள்விக்குறியாக இருக்கும்போது, விரைவான தீர்ப்பு என்பது பகற்கனவே!