PUBLISHED ON : ஏப் 15, 2024 12:00 AM

சொ.முத்துக்குமரன், சிதம்பரம், கடலுார்
மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை,
'ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன்' என்கிறார். இன்றைய
காலகட்டத்தில் இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய கருத்து. ஆரோக்கியமான
ஜனநாயகம் மலர, அவரது கருத்து மிகவும் உதவும்.
ஆனால், ஒரு நெருடல்
உள்ளது. தங்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும்
ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள் என்று ஏன் அவரால் கூற முடியவில்லை?
தி.மு.க.,
- அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஓட்டுக்கு பணம் தரமாட்டோம்
என்று பேசவே பயப்படுவர். மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது, கொள்ளை அடித்த
பணத்தின் ஒரு பகுதியை மீண்டும் வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றி பெறுவதையே
இந்த இரு கட்சிகளும் வழக்கமாக கொண்டுள்ளன.
ஒவ்வொரு
தேர்தலின்போதும், எல்லா கட்சிகளும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு
வாங்குகின்றனர் என்பது, பிறந்த குழந்தைக்கு கூட தெரியும்; ஆனால், தேர்தல்
ஆணையத்திற்கு மட்டும் தெரியாது.
அதை தடுக்கக்கூடிய தைரியமோ,
அதிகாரமோ தேர்தல் ஆணையத்திடம் இல்லை என்பது கசப்பான உண்மை. இப்படிப்பட்ட
காலத்தில், வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என்று
அண்ணாமலையின் தைரியமான பேச்சு, அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
இதற்காக
அண்ணாமலையை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். அண்ணாமலை போல் அனைத்து
கட்சிகளும் முடிவெடுத்தால், இந்திய ஜனநாயகம், உலகமே பின்பற்றத்தக்கதாக
அமையும்.
நம் அலட்சியம் அவர்களுக்கு உரம்!
பொ.பாலாஜி கணேஷ், கோவிலாம் பூண்டியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்பெல்லாம் அரசியல் தலைவர்கள் பேசினால், தொண்டர்கள் உணர்ச்சி பொங்க கூடுவர். பேச்சைக் கேட்க ஆசையாக இருக்கும்.
இப்போதெல்லாம், நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. 'ஒரு கூட்டத்துக்கு வந்தால், பணம் எவ்வளவு தருகிறாய்? பிரியாணி உண்டா? குவார்ட்டர் உண்டா?' என்று கேட்கும் அளவிற்கு, அரசியல்வாதிகள் மக்களின் புத்தியை மழுங்கடித்து வைத்திருக்கின்றனர்.
ஜாதிக்காக ஓட்டு, மதத்துக்காக ஓட்டு என, மக்களை தனித்தனியாக பிரிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த நடுநிலைவாதிகளையோ, கேட்கவே வேண்டாம்; யாருக்கு வாக்களிக்க போறோம் என்று வெளியே சொல்லாமல், யார் பணம் அதிகமாக தருகின்றனரோ, அவர்களுக்கு ஓட்டு போட்டு விடுகின்றனர்.
மக்களாகிய நாம் திருந்தாதவரை, அரசியல்வாதிகளும் நிச்சயம் திருந்த மாட்டார்கள். என் ஜாதிக்காரன், என் மதத்துக்காரன் என ஓட்டு போட்டு விட்டு, பத்து நாளான பின், சமூக வலைதளங்களில், 'அடுத்த முறை பார்ப்போம்... விட்டு விடுவோமா?' என, கம்பு சுத்தும் வேலையும் நடக்கும்.
நாம் செய்யும் ஒவ்வொரு அலட்சியமான வேலையும், அரசியல்வாதிகளுக்கு உரம்; அவர்கள் இதைவிட இன்னும் கொடூரமாகத் தான் இந்த சமுதாயத்தில் வலம் வருவர். பார்த்து நடந்து கொள்வோம்!
ஓட்டு போடுவோர் பாடு திண்டாட்டம் தான்!
ச.கந்தசாமி, எட்டயபுரம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தேசிய விடுதலைக்காக துவங்கப்பட்ட, அகில இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கம்; பொதுவுடமைக் கொள்கை பிடிப்புள்ள செஞ்சட்டைக்காரர்களான கம்யூனிச இயக்கம் என, இரண்டே இரண்டு தான், முன்பிருந்தன.
நடைமுறை விஷயத்தில் ஒருவரை ஒருவர் அடித்துப் பிடித்துக் கொள்வரே தவிர, மக்களுக்கு நலன்கள் புரிவதில், 'நான் முந்தி, நீ முந்தி' என போட்டி போட்ட காலம் அது. அரசியல் அனுபவம், வயது, கல்வியறிவு, பக்குவம், சாதுர்யம், மனத்திட்பம், செயல்துாய்மை முதலானவற்றை, தராசுமுனைக் கோல் போல் எடை போட்டுப் பார்த்து, அத்தகைய வேட்பாளர்களுக்கே வாக்களித்த காலம் இருந்தது.
இன்றைய அரசியல் இயக்கத் தலைவர்கள், பதவியாசை, பண ஆசை, குறுக்கு வழிகளில் முன்னேற்றம் என்பதில் கைதேர்ந்தவர்களாக மாறி விட்டனர். மிரட்டுதல், பயமுறுத்துதல், அச்சுறுத்தி சாதகமாக வாக்களிக்க செய்தல், எதற்கும் மசியாதவர்களை தீர்த்துக் கட்டுதல் இன்னும் என்னென்ன மாபாதகங்களுக்கு வாய்ப்புண்டோ, அத்தனையும் செய்யக் கூசாதவர்களே, இன்று அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக ஆக முடியும்.
ரவுடிகளுடன் கைகோர்த்துள்ள அரசியல் இயக்கத் தலைவர்கள் தான், தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அச்சத்தாலும், இயலாமையாலும், ஒதுங்கிப் போகவே, என் போன்ற மூத்த, கிழ வாக்காளப் பெருமக்கள் பலர் நினைக்கிறோம். ஓட்டு போடும் இளைஞர்கள் பாடு திண்டாட்டம் தான்!
இருமுக அரசியல்வாதிகளை புறக்கணிப்போம்!
ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியதிலிருந்து, பல கூத்துகள் அரங்கேறி வருகின்றன. கூட்டத்திற்கு வருபவர்களுக்கு 200, 300 ரூபாய். பிரமாண்ட கூட்டத்தைப் பார்க்கும் தலைவர், வெற்றி உறுதி என கற்பனை செய்து கொண்டு விடுகிறார்; புளகாங்கிதம் அடைகிறார்.
விருதுநகர் தொகுதிக்கு சம்பந்தமே இல்லாமல், மதுரை, ஈரோடிலிருந்தெல்லாம் வண்டி வண்டியாக, மக்கள் வருகின்றனர். முதல் நாள் ஒரு கட்சிக்கு, அடுத்த நாள், அடுத்த கட்சிக்கு என, காசு வாங்கிக் கொண்டு பயணிக்கின்றனர்.
தி.மு.க., அமைச்சர்களும், எம்.பி.,க்களும் செல்லும் இடமெல்லாம் மக்கள் எதிர்ப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
கையேந்தி யாசகம் கேட்கும் பிச்சைக்காரனை விட ஒரு படி கீழே இறங்கி, காலில் விழுந்து ஓட்டு கேட்கும் அரசியல்வாதிகள், வாய்க்கு வரும் புருடாக்களை அள்ளி விடுகின்றனர். வெற்றி பெற்றபிறகு, 'நீ என்னத்த ஓட்டுப்போட்டு கிழிச்ச... துட்டு வாங்கிட்டுத்தான ஓட்டுப் போட்ட, எல்லாமே நாங்க போட்ட பிச்சை' என்று பேசுகின்றனர்.
தேர்தல்தோறும் இதைப் பார்த்தாகி விட்டது. இனி, இருமுக அரசியல்வாதிகளை புறக்கணிப்போம்!
டாஸ்மாக்குக்கு பதிலாக சுற்றுலா!
எஸ்.ரவிசங்கர்,ஹைதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக்கை மூடுவோம்' என, இரண்டாண்டுக்கு முன், பா.ஜ., அண்ணாமலை சொன்னார்.
'வருமான இழப்பை எப்படி ஈடு கட்டுவீர்கள்?' எனக் கேட்டதற்கு, 'சுற்றுலாவை மேம்படுத்துவோம். அத்துறையில் அதிக வருமானம் வர வாய்ப்பிருக்கு' என்றார் அண்ணாமலை.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் பேசும்போதெல்லாம், 'உங்கள் நண்பர்களை, இந்தியாவுக்கு சுற்றுலா அனுப்புங்கள். இது தான் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான நற்காரியம்' என்பார்.
மருத்துவ சுற்றுலா, சாகச சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா என, ஏராளமானவை இங்கு உள்ளன. சுற்றுலாவை ஊக்குவித்தால், டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள், ேஹாட்டல்கள் வாழ்வாதாரத்தைப் பெறுவர். பூக்கடைக்காரர் உட்பட பலருக்கும் நல்லது நடக்கும்; அரசுக்கும் நல்ல வருமானம்!

