PUBLISHED ON : ஜூலை 29, 2026 12:00 AM

டாக்டர் எஸ்.எ.பிரபுராஜ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: கடந்த ஓராண்டு குழப்பத்திற்கு பின், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் தன் மகன் அன்புமணியிடம் கொடுத்து, அரசியல் பயணத்தில் இருந்து ஓய்வெடுத்துள்ளது, அக்கட்சியினருக்கு மட்டுமல்ல; அரசியல் நோக்கர் களுக்கும் மகிழ்ச்சியான செய்தியே!
கடந்த 1960ல் சென்னை மருத்துவக் கல்லுாரியில் நானும், ராமதாசும் ஒன்றாக கல்வி பயின்றோம். அக்காலத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்று இருவரும் சிறை சென்றுள்ளோம். அதன்பின், தி.மு.க., ஆட்சியில் எத்தனையோ பிரச்னைகளுக்கு ராமதாசுடன் இணைந்து குரல் கொடுத்துள்ளேன்.
அவ்வகையில், ராமதாசின் அரசியல் பயணத்துடனே, என் வாழ்வும் கடந்து வந்துள்ளது.
கடந்த 1989ல் வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக, பா.ம.க., என்ற கட்சியை துவக்கி, குறுகிய காலத்திலேயே, தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக கட்சியை வளர்த் தெடுத்தவர், ராமதாஸ்.
மாநிலத்தில் மட்டுமல்ல; மத்திய அமைச்சரவையிலும் அன்புமணி உட்பட என்.டி.சண்முகம், ஏ.கே.மூர்த்தி, ஆர்.வேலு, இ.பொன்னுசாமி தலித் எழில்மலை போன்றோரை அமைச்சராக்கி அழகு பார்த்தார்.
இதன் வாயிலாக இரு திராவிட கட்சிகளுக்கு இணையான பலத்துடன், பொருளாதாரத்தில் வலிமை உள்ள கட்சியாக பா.ம.க.,வை மாற்றிய பெருமையும் ராமதாஸையே சேரும்!
அதேநேரம், 58 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில், சர்க்காரியா கமிஷன் முதல், 2ஜி, சாராய ஊழல், நில அபகரிப்பு, சொத்து குவிப்பு என ஏகப்பட்ட ஊழல்களில் திளைத்து, சிறை சென்ற தலைவர்கள் மத்தியில், எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் இடம் தராத தலைவர் ராமதாஸ்.
மது ஆலைகளை நடத்துவோருக்கும், அதன் வாயிலாக ஊழலில் திளைத்த இரு திராவிட கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.
ஆனாலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை முடக்கியதை போல், அவர்களால் ராமதாஸை அரசியலில் முடக்க முடியவில்லை. காரணம், அவருடைய கல்வி அறிவும், போராடும் குணமும் தான்!
நண்பர் மற்றும் மூத்த இருதய நோய் நிபுணர் என்ற முறையில், 'இன்றைய அரசியல் இளைஞர்கள் கையில் உள்ளது; அதனால், உங்கள் மகன் அன்புமணியிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, முழுமையான ஓய்வு எடுங்கள்' என்று எத்தனையோ முறை, 'தினமலர்' நாளிதழ் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
அதற்கு இப்போது தான் செவி சாய்த்துள்ளார்; மகிழ்ச்சியாக உள்ளது.
இன்றைய அரசியல் களம், 'ஜென் சி' எனப்படும் இளைஞர்களை நம்பி உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியோர் வரை சமூக வலைதளம் வாயிலாக அரசியலை கண்காணித்து வருகின்றனர்.
இவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப, தமிழக வெற்றிக் கழக முதல்வர், 'ஊழலை ஒழித்தே தீருவேன்' என்று அரசியல் களத்தில் குதித்துள்ளார். மற்றொருபுறம், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, 'வி த லீடர்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கி அரசியல் களமாட வருகிறார்.
இந்த இளம் தலைமுறை அரசியல் வாதிகளோடு, இனி அன்புமணியும் சேர்ந்து களமாடட்டும்; அதன் வாயிலாக, ஓர் ஒளிமயமான தமிழகம் உருவாகட்டும்!
------
தமிழகம் முழுதும் செயல்படுத்த வேண்டும்!
சி.சுருதி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஏழை மாணவர்கள் தொலைவில் உள்ள தங்கள் பள்ளிகளுக்கு செல்ல, பேருந்து கட்டணம் ஒரு தடையாக இருந்து விடக் கூடாது என்பதற்காக, தமிழகத்தில் கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் நடைமுறையில் உள்ளது.
ஆனால், பள்ளி நேரங்களில் போதுமான பேருந்துகளை அரசு இயக்காததால், மாணவர்கள் பேருந்து படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்; தவறி விழுந்து விபத்துகளிலும் சிக்கிக் கொள்கின்றனர்.
இதனால், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மாணவர்களின் கஷ்டத்தை போக்கும் வகையில், காலை - மாலை நேரங்களில் மாணவர்கள் மட்டுமே பயணம் செய்யும் வகையில், சிறப்பு பேருந்துகளை இயக்க முன்வந்துள்ளது, தமிழக அரசு.
அதேநேரம், மாணவர்கள் சிறப்பு பேருந்து திட்டம் தற்போது சென்னையில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை உடன டியாக தமிழகம் முழுதும் விரிவுபடுத்தி, மாணவ - மாணவியரின் கஷ்டத்தை போக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
--------
அரசு மாற்றி யோசிக்குமா?
பி.தனசேகரன், வழக்கறிஞர், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட அளவு டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத் தரவிட்டது அனைவரும் அறிந்ததே!
இயல்பான மழைப்பொழிவு இருக்கும் காலத்திற்கு மட்டுமே இந்த உத்தரவு தமிழகத்திற்கு பயன் அளித்து வருகிறது; மற்ற காலங்களில் காவிரி நீரை பெறுவது, பெரும் அக்கப்போராக இருக்கிறது.
இதைத் தவிர்க்க, ஒவ்வொரு வாரமும் கர்நாடக அணைகளுக்கு வந்து சேரும் தண்ணீரில் பாதியை, வார கடைசியில் தமிழகத்திற்கு திறந்துவிடுமாறு, ஒரு தற்காலிக ஏற்பாடு செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியோ, காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படியோ கர்நாடகாவை தண்ணீர் கொடுக்க கட்டாயப்படுத்தினால், மழைப்பொழிவு குறைவாக உள்ளதை காரணம் காட்டி மறுப்பர்.
அதனால், இடைக்கால ஏற்பாடாக கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகளுக்கு வந்து சேரும் தண்ணீரில், 50 சதவீத நீரை தமிழகத்திற்கு ஒவ்வொரு வார இறுதியிலும் திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்தி, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது தான், எல்லா காலங்களிலும் காவிரியில் நமக்கான உரிமையை நாம் பெற முடியும்.
இல்லையெனில், மழைப் பொழிவு இருக்கும் காலங்களில் மட்டும், உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதாக கூறி, தமிழகத்தை ஒரு வடிகாலாகத் தான் கர்நாடகா பயன்படுத்துமே அன்றி, நமக்கான நீரை முழுமையாக பெற முடியாது.
தமிழக அரசு யோசிக்குமா?
