PUBLISHED ON : ஜன 14, 2026 03:52 AM

எஸ்.ராஜேஷ், அவினாசி, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வெனிசுலா போதைப் பொருள் கடத்தியதாக கூறி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவையையும், அவரது மனைவியையும் கைது செய்துள்ளது, அமெரிக்கா.
ஆனால், இதன் உண்மையான காரணம், அந்நாட்டின் எண்ணெய் வளம் தான்!
உலகிலேயே அதிக எண்ணெய் வளங்களை கொண்ட நாடு வெனிசுலா.
அதனால் தான், அந்நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்த அமெரிக்கா, தற்போது, அதை நிறை வேற்றிக் கொண்டுள்ளது.
இப்படித்தான், 'ஈராக் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், உலகைக் காப்பாற்ற வேண்டும்' எனக் கூறி, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி, அதிபர் சதாம் உசேனை துாக்கிலிட்டது, அமெரிக்கா. போருக்கு பின், ஒரு அணு ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ரஷ்யா, உக்ரைன் மீது போர் செய்தால், அது குற்றம்; ஆனால், அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு எதிராக போர் செய்தால் அதற்கு பெயர், 'விடுதலை!'
ஆஹா, என்ன ஒரு கொள்கை!
பாகிஸ்தான், பஞ்சாப் எல்லை வழியே, 'ட்ரோன்'கள் வாயிலாக, இந்தியாவிற்குள் போதைப் பொருட்களை அனுப்புகிறது. அமெரிக்கா இதை கண்டிக்க கூட இல்லை. மாறாக, பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து இந்தியாவை எதிர்க்க ஆரம்பித்துள்ளது. காரணம், நம் நாடு வல்லரசாக வளர்வது அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை.
அமெரிக்காவின் இந்த எதிர்ப்பை நம் நாடு மிகச் சிறப்பாக கையாண்டாலும், 'அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்தானது; நண்பராக இருப்பது அபாயகரமானது' என்று, முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிசிங்கர் கூறியதை நம் அரசு நினைவில் கொள்ள வேண்டும்! lll
குரங்கு கை பூமாலையானது தமிழகம்!
எ.ஈஸ்வரன், சங்ககிரி, சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்... ஸ்டாலினுக்கு, பழனிசாமி பதில் சவால்; அ.தி.மு.க., ஆட்சியில் அதிக திட்டங்களா, தி.மு.க., ஆட்சியில் அதிக திட்டங்களா? மேடைக்கு வா, சட்டசபைக்கு வா...' என, மாறி மாறி சவால்களை விட்டுக் கொள்கின்றனர், தி.மு.க., முதல்வர் ஸ்டாலினும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும்!
இந்த இரு தலைவர்களும் தங்கள் ஆட்சியின் சாதனைகளை தெரிந்து கொள்ள விரும்பினால், தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் சென்று பார்த்தால் தெரிந்து விடப் போகிறது... இவர்கள் ஆட்சியின் லட்சணம்!
ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து தலைமை மருத்துவமனைகள் வரை, சுகாதார சீர்கேடுகள், அலட்சிய போக்குகள், மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு, பதுக்கல்கள், விரயங்கள், செயல்படாத மருத்துவ உபகரணங்கள், லஞ்சம், பேரம், இயலாதவர்களிடம் காட்டும் கோபம், அலட்சியம், உதாசீனம்...
இவைகளுக்கு நடுவில், இவர்களை நம்பி ஓட்டளித்த மக்கள்!
துவக்க பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை ஆசிரியர்கள் பற்றாக்குறை, துாய்மை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள், இளநிலை உதவியாளர்கள் என, அடிப்படை பணியாளர்கள் இல்லாத நிலை.
குடிநீர் முதல் கழிப்பறை வரை சுகாதார சீர்கேடுகள் ஒருபுறம்...
மற்றொருபுறம், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி; அதனால், மாணவர்களின் கல்வி திறனில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என, இவர்களது ஆட்சிகளின் சட்டங்களாலும், திட்டங்களாலும் மக்கள் படும் அவலத்தை பட்டியலிட முடியாது.
மொத்தத்தில், இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளில், தமிழகம் குரங்கு கை பூமாலையாக சிக்கி, சின்னா பின்னமாகி உள்ள நிலையில், வெட்டி பெருமை தேவையா?
வெறுப்பு நல்லது தான்!
கே.என்.ஸ்ரீதரன், பெங்களூருவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதச்சார்பின்மை என்று வாய்கிழிய மேடைகளில் பேசுவதும், ஆட்சிக்கு வந்த பின், ஹிந்துக் களுக்கு எதிராக செயல்படு வதும் தி.மு.க.,வினருக்கு வழக்கம்.
திருப்பரங்குன்றம் மலையில், ஆண்டிற்கு ஒரு நாள் கார்த்திகை தீபத்தன்று கோவிலுக்கு சொந்தமான தீபத்துாணில் தீபம் ஏற்றுவது பொது அமைதியை பாதிக்கும் என்று தமிழக அரசு கூறுவது அபத்தம் என, கண்டித்துள்ளது, உயர் நீதிமன்றம்.
அப்படி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டால், கலவரம் நடந்தால் அதற்கு தமிழக அரசு தான் காரணமாக இருக்க முடியும் என்றும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.
வழக்கம் போல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் குட்டுப்பட்டால், அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், தி.மு.க., என்ன செய்யும்?
அப்போதும் தீர்ப்பு கூறிய நீதியரசர் என்ன ஜாதியை சேர்ந்தவர் என்ற ஆராய்ச்சியில் இறங்கி, அவர் குறித்து வெறுப்பு பிரசாரம் செய்யுமா?
எத்தனை முறை நீதிமன்றங்களால் குட்டுப்பட்டாலும், தி.மு.க., ஆட்சியாளர்கள் திருந்தப் போவது இல்லை.
திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில், உள்ளூர் முஸ்லிம்களும், தர்கா கமிட்டி உறுப்பினர்களும் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அவர்களை துாண்டிவிட்டு வக்ப் போர்டு வாயிலாக வழக்கு போட வைத்தது, தி.மு.க., அரசு.
தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை தடுக்க, 'அது தீபத்துாண் அல்ல; நில அளவைக் கல்' என்றும், 'சமணர்களின் கல் துாண்' என்று, பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டது தி.மு.க., அரசு.
நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக அத்தனை பொய்பிரசாரங்களும் தவிடுபொடியாகிவிட்டன.
ராமனும், கண்ணனும், விநாயகரும் வடமாநில கடவுள்கள்; அதனால், அப்பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மாட்டார் திராவிட மாடல் முதல்வர்; ஆனால், அரேபிய, ஐரோப்பிய பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வார்.
ஆனாலும், முருகன் தமிழ் கடவுள் தானே... முத்துவேல் கருணாநிதியின் மகனான தி.மு.க., முதல்வர், நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் முருகவேலுக்கு தீபம் ஏற்ற மறுப்பது ஏன்?
அந்த அளவு ஹிந்து மத வெறுப்பு!
அவ்வெறுப்பு அப்படியே தொடரட்டும்; அப்போதுதான் ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து, தி.மு.க.,வை தமிழகத்தில் இருந்து துடைத்தெறிவர்!

