PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, பல்வேறு புதிய நல திட்டங்கள், 'ஓரணியில் தமிழகம், உங்களுடன் ஸ்டாலின்' போன்ற கோஷங்கள், விளம்பரங்கள் என்று ஆளுங்கட்சி அலப்பறையை ஆரம்பித்து விட்டது.
அரசு விளம்பரங்கள் போதாது என்று கட்சிக்காரர்களும் சமூக வலைதளங்களில், முதல்வர் மருத்துவமனையில் லுங்கி அணிந்தபடி மக்களின் குறைகளை கேட்டறிந்தார் என்பது போல் புகைப் படங்கள் வெளியிட்டு மக்களை எரிச்சலடைய வைக்கின்றனர்.
இப்படித்தான் ஆட்சிக்கு வந்த புதிதில், சாலையோரத்தில், பூங்காக்களில் முதல்வர் சைக்கிளில் சென்று, நடைபயிற்சி செய்வோரை சந்திப்பது போன்று புகைப்படம் வெளியிட்டனர். அதனால், மக்கள் என்ன பலனடைந்தனர் என்பது தான் தெரியவில்லை.
இதுவரை, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல், நாளொன்றுக்கு, 19 மணி நேரம் அலுவலக பணி செய்து வரும் பிரதமர் மோடி கூட, இப்படி விளம்பரம் தேடிக்கொண்டதில்லை.
வெறும் ஊடக விளம்பரங்கள் வாயிலாக மக்கள் மனதை மாற்றிவிடலாம் என்று நினைத்த ஆம் ஆத்மி கட்சி, சமீபத்திய டில்லி சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது. 10 ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்த அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடிக்கப்பட்டார் என்பதை முதல்வர் ஸ்டாலின் மனதில் கொள்ளவேண்டும்.
ஒருபுறம் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள், நிலுவையில் உள்ள ஓய்வூதியம் கேட்டு போராடுகின்றனர்; மறுபுறம், தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி போராடுகின்றனர். போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத அளவிற்கு சட்டம் - ஒழுங்கு அவல நிலையில் உள்ளது. பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இப்பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காணாமல், வெற்று கோஷங்களுடன், விளம்பர பலகைகளை துாக்கிக் கொண்டு, ஓட்டு அறுவடைக்கு கிளம்பி விட்டார், தமிழக முதல்வர்.
வீரியத்தால் வெற்றி பெற முடியாது என்பது தெரிந்து விட்டது; அதனால், விளம்பரத்தால் கரை சேர துடிக்கிறார்.
ஆனால், பல் இல்லாதவர் என்று தெரிந்த பின், எவராவது பக்கோடாவை சாப்பிட கொடுப்பரா?
அண்ணாமலையின் அமைதி நல்லதல்ல! வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடக காவல் துறையில் பணியாற்றிய போதே,
தன் திறமை மற்றும் பாரபட்சமற்ற செயல்பாடுகளால் மக்களால் மிகவும்
விரும்பப்பட்டவர், பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை.
தமிழக
பா.ஜ., தலைவராக, தன் துடிப்பான செயல்பாடுகளால் இளைஞர்களை ஈர்த்தவர்
அண்ணாமலை. அவர் தலைமையில், தமிழகத்தில் பா.ஜ., வேகமாக வளர்ந்து வந்தது.
நோட்டாவோடு போட்டி போடும் கட்சி என்று விமர்சிக்கப்பட்ட பா.ஜ.,வை,
பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தார்.
ஆளுங்கட்சிக்கு எதிராக
பல்வேறு போராட்டங்களை நடத்தியும், தி.மு.க., பைல்ஸ்கள் வெளியிட்டும்,
பா.ஜ.,வை உயிரோட்டமாக வைத்திருந்தார்.கடந்த பார்லிமென்ட் தேர்தலில்
அண்ணாமலை தோற்றாலும், ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல், கணிசமான ஓட்டுகளை
பெற்று, மக்கள் மனங்களை வென்றார்.
அவர் தோற்றதற்காக உண்மையில்
வருத்தப்பட்டவர்கள் அநேகர். நேர்மையாளர்கள், படித்த இளைஞர்கள், முதல் முறை
ஓட்டளித்தோர் என, இவருக்கென்று ஒரு கூட்டம் இருந்தது.
அதேநேரம்,
பா.ஜ., வளர்ந்து வரும் கட்சி என்பதால், தனித்து நின்று தமிழகத்தில் வெற்றி
பெறுவது கடினம். எனவே, கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற, முக்கிய
எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வின் கூட்டணி அவசியம்.
ஆனால்,
அண்ணாமலை தன் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர். இதன்காரணமாக, அவர் தன்
மாநில தலைவர் பதவியில் இருந்து விலக, புதிய தலைவராக பொறுப்பேற்றார்,
நயினார் நாகேந்திரன்.
அரசியல் அனுபவம் மிகுந்த இவர், தன் பாணியில்
சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், அண்ணாமலை தலைமையில், பா.ஜ.,வினரிடம்
காணப்பட்ட துடிப்பு, சுறுசுறுப்பு, வேகம் தற்போது இல்லை என்பதே உண்மை.
அண்ணாமலை தற்போது கட்சிக் கூட்டங்களில் அதிகம் தென்படுவதில்லை; பத்திரிகையாளர்களையும் அவ்வளவாக சந்திப்பதில்லை.
இது, தமிழக பா.ஜ.,விற்கு நல்லதல்ல. தமிழகத்தில் பா.ஜ., வேகமாக வளர வேண்டுமென்றால், அண்ணாமலையின் பங்களிப்பு அவசியம்.
இதை, தமிழக பா.ஜ., புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்!
குற்றவாளிகளுக்கும் சிறப்பு சலுகை அளிக்கலாமே! செ.சாந்தி, மயிலாடுதுறை
யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டசபை தேர்தல்
நெருங்குவதால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் கண்டபடி அபராதம்
விதித்து, ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம்' என, அரசு
தரப்பில் போலீசாருக்கு வாய் மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதாம்!
இதன்படி, சிலவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட்டாலும், பல விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதில்லை.
விதிமீறல்களை சட்டப்படி அணுகாமல், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்த துவங்கியிருக்கும் காவல் துறையின் செயல், போலீசார் மீது அலட்சிய
மனப்போக்கையே உண் டாக்கும். இதனால், விபத்து கள் தான் அதிகரிக்கும்.
திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரிகட்ட,
காவல் துறை இப்படி நடந்து கொள்கிறது என்றால், வாகன ஓட்டிகளுக்கு மட்டும்
ஏன் இந்த சிறப்பு சலுகை?
கள்ள சாராயம் விற்போர், பாலியல் குற்ற
வாளிகள், கனிவளம் திருடுவோர், கொலை - கொள்ளை அடிப்போர், இப்படி
பல்வேறுவிதமான குற்றவாளிகளுக்கும் சலுகை காட்டலாமே!
'ஒன்று
வாங்கினால் ஒன்று இலவசம்' என்ற ஆடி மாத சிறப்பு தள்ளுபடி விற்பனை போல்
குற்றம் செய்வோரின் தவறுகளுக்கும், 2026 சட்டசபை தேர்தல் முடியும் வரை
தண்டனையில் சிறப்பு தள்ளுபடி வழங்கலாமே!
இதன் வாயிலாக, தி.மு.க.,
மீது பொது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி நீங்கும், ஆட்சியாளர்கள் மீது
அளவற்ற மரியாதை உண்டாகும். தேர்தல் நேரத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின்
பொத்தான்கள் உடையும் அளவுக்கு மக்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து மீண்டும்
ஸ்டாலினை முதல்வராக்கி சரித்திரம் படைப்பர் அல்லவா?