/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
வன்முறை சினிமாக்களை தடை செய்யுங்கள்!
/
வன்முறை சினிமாக்களை தடை செய்யுங்கள்!
PUBLISHED ON : ஜன 03, 2026 01:32 AM

வெ.தீனதயாளன், காஞ்சிபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் போதை சிறுவர்கள் நால்வர் வடமாநில இளைஞரை தாக்கி, அதை, 'ரீல்ஸ்' எடுத்து வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
சிறுவர்களின் இச்செயலுக்கு போதைப் பழக்கம் ஒரு காரணமாக இருந்தாலும், கஞ்சா புகைப்பவனையும், ரவுடிகளையும் கதாநாயகனாக காட்டும் திரைப்படங்களும் மற்றொரு காரணம்.
கடந்தாண்டு, அனிமல் என்றொரு ஹிந்தி படம் வெளியானது. பெண்களுக்கு எதிரான வன்முறை நிறைந்த இப்படத்திற்கு, சிறந்த ஒலி வடிவமைப்பு, பின்னணி இசைக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
அதேபோன்று, புஷ்பா என்றொரு படம். இப்படத்தில் செம்மரத்தை கடத்துபவன் கதாநாயகனாகவும், அதை தடுக்கும் போலீஸ் அதிகாரி வில்லனாகவும் காட்டப்பட்டனர். இப்பட கதாநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இதுபோன்ற சமூக சீர்கேடுகளை நியாயப்படுத்தும் படங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் அளிக்கும் நிலையில், அப்படங்களை பார்க்கும் பதின்ம வயது இளைஞர்கள், தங்களையும் அக்கதாபாத்திரத்தில் பொருத்தி பார்த்து, அதுபோன்று நடந்து கொள்கின்றனர்.
அதன்விளைவே, திருத்தணி வன்முறை சம்பவம்!
இதுபோன்று தினந்தினம் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே, குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை, சீர்திருத்த பள்ளிகளில் சேர்ப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. போதைப் பொருட்களை கட்டுப்படுத்தி, வன்முறையை வெளிப்படுத்தும் படங்களை தடை செய்து, தண்டனையை கடுமையாக்கினால் மட்டுமே குற்றங்கள் குறையும்!
குறுநில மன்னரா செங்கோட்டையன்?
டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தை இப்போது உள்ள ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் தான் மாறி மாறி ஆள வேண்டுமா?' என கேள்வி எழுப்பியுள்ளார், தமிழக வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்.
எம்.ஜி.ஆர்., நடிகராக இருந்தபோதே, அவருக்கு ரசிகர் மன்றம் அமைத்தவர், ஜி.பி.வாரணவாசி. அத்துடன், 1972ல் அ.தி.மு.க., எனும் கட்சியை எம்.ஜி.ஆர்., துவக்கியபோது, கோபிசெட்டிபாளையம் நகர அமைப்பாளராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டவர்.
எம்.ஜி.ஆரின் கொள்கைகளை நோட்டீசாக அச்சடித்து, பொதுமக்களுக்கு வழங்கி கோபிசெட்டிபாளையத்தை அ.தி.மு.க.,வின் கோட்டையாக மாற்றியவர் வாரணவாசி.
கொள்கை பிடிப்போடு அ.தி.மு.க.,விற்கு வந்த இவரால், ஒருமுறை கூட எம்.எல்.ஏ.,வாக முடியவில்லையே ஏன்?
காரணம், கொள்கை பிடிப்பில்லாமல் அ.தி.மு.க.,விற்கு வந்த செங்கோட்டையனால்!
கடந்த 1975ல் குள்ளபாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, எம்.ஜி.ஆரின் செல்வாக்கால் வெற்றி பெற்றவர் தான் செங்கோட்டையன்.
முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் அரங்கநாயகத்தின் சிபாரிசை ஏற்று, 1977- சட்டசபை தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியின், அ.தி.மு.க., வேட்பாளராக செங்கோட்டையனை எம்.ஜி.ஆர்., அறிவித்தபோது, 'இத்தொகுதி கர்நாடக மக்கள் வசிக்கும் எல்லையில் இருப்பதால், எனக்கு பெரிதாக ஓட்டு விழாது; அதனால், கோபிசெட்டிபாளையம் தொகுதியை தாருங்கள்' என்று கேட்டார், செங்கோட்டையன்.
அதற்கு, 'மாவட்ட அமைப்பாளர் ராமசாமிக்கு கோபிசெட்டிபாளையம் தொகுதியை கொடுத்து விட்டேன். அதை மாற்ற முடியாது. சத்தியமங்கலத்தில் என் பெயரை சொல்லு; கர்நாடக மக்கள் உனக்கு ஓட்டு போடுவர்' என்றார் எம்.ஜி.ஆர்.,
அதேபோன்று, எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி வெற்றி பெற்றார் செங்கோட்டையன்.
இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ., ராமசாமி, 1980-ல் நாஞ்சில் மனோகரனோடு சேர்ந்து தி.மு.க.,விற்கு சென்று விடவே, அந்த ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையனுக்கு கிடைத்தது.
அத்தேர்தலில் செங்கோட்டையன் வெற்றி பெற்றார். அதன்பின், எம்.ஜி.ஆருக்காகவே கட்சியில் இருந்த வாரணவாசி ஓரம் கட்டப்பட்டார். தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில் ஒன்பது முறை எம்.எல்.ஏ., ஆனார், செங்கோட்டையன்.
அன்று, கர்நாடக மக்களிடம் எம்.ஜி.ஆர்., பெயரை சொல்லி, தன் அரசியல் வாழ்வுக்கு அஸ்திவாரம் போட்டுக் கொண்ட செங்கோட்டையன், இன்று, தன் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக, நடிகர் விஜய்க்கு காவடி துாக்குகிறார்.
இதில், 'தமிழகத்தை தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தான் மாறி மாறி ஆள வேண்டுமா?' என்று கேட்கிறார். அப்படியெனில், செங்கோட்டையன் என்ன கோபிசெட்டிபாளையத்தின் குறுநில மன்னரா... ஏன், மீண்டும் மீண்டும் அதே தொகுதியில் நின்று வென்றார், வெற்றியடைய நினைக்கிறார்?
அதிகாரிகள் பதில் அளிப்பரா?
ஏ.கே.பி.சோலைமலை, கள்ளிக்குடி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சமீபத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட 2.80 லட்சம் வேளாண் பயிர் விவசாயிகளுக்கு, 254.38 கோடி ரூபாய், 80,383 தோட்டக்கலைப் பயிர் விவசாயிகளுக்கு, 35.25 கோடி ரூபாய் என மொத்தம், 289 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்தொகை, நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த அறிவிப்பு தொடர்பாக மதுரை மாவட்டத்தில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா வேளாண்மை துறை அதிகாரிகளை அணுகிய போது, 'அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை' என்கின்றனர்.
மாநில அளவில் அறிவிக்கப்பட்ட விவசாய நலத்திட்டம், மாவட்ட அளவில் அமல்படுத்தப்படாததுடன், அதுகுறித்த தகவல்கள் கூட மறைக்கப்படுவது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பருவமழை பொய்ததால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறு, குறு விவசாயிகள், இந்த நிதி உதவியை எதிர்பார்த்துள்ள நிலையில், அதிகாரிகளின் இப்பதில் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, 289 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா, மதுரை மாவட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, விவசாயிகளின் வங்கி கணக்கில் எப்போது இத்தொகை வரவு வைக்கப்படும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிப்பரா?

