sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

ஊறுகாய் ஆகி விடாதீர்கள் மக்களே!

/

ஊறுகாய் ஆகி விடாதீர்கள் மக்களே!

ஊறுகாய் ஆகி விடாதீர்கள் மக்களே!

ஊறுகாய் ஆகி விடாதீர்கள் மக்களே!

3


PUBLISHED ON : பிப் 22, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 22, 2025 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை, பா.ஜ.,வைத் தவிர எந்தக் கட்சியுமே ஆதரிக்கவில்லை. காரணம், இவர்கள் யாருக்குமே, 484 பக்கங்களை கொண்ட அதன் ஷரத்தே என்னவென்று தெரியாது. ஏன்... இக்கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவில் இடம் பெற்றவர்கள் யார் என்பதை கூட அறியாதவர்கள்.

புதிய கல்விக் கொள்கை என்பது ஆண்டிகள் கூடி கட்டிய மடம் அல்ல; தலைசிறந்த விஞ்ஞானியான கஸ்துாரிரங்கன், ஜாமியாமிலியா இஸ்லாமியா பல்கலை துணைவேந்தர் நஜ்மா அக்தர், மத்திய பழங்குடி பல்கலை துணைவேந்தர்வி.கட்டிமணி, தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் தலைவர் மகேஷ் சந்திரா, ஐ.ஐ.டி.,யின் வருகை பேராசிரியரான ஜெர்மனியைச் சேர்ந்த மிக்கேல் டேனினோ, பஞ்சாப் மத்திய பல்கலை வேந்தர் ஜக்பீர்சிங், அமெரிக்க கணிதத்துறை நிபுணரும், இந்திய வம்சாவளியுமான மஞ்சுல் பார்கவா, ஜம்முவில் உள்ள இந்திய வர்த்தக மேலாண்மை நிறுவன தலைவர் மிலிந்த் காம்ப்ளே போன்றோர் இணைந்து உருவாக்கியது.

இவர்கள் அனைவரும் கல்வித் துறையின் ஜாம்பவான்கள்!

எந்த சூழ்நிலையிலும், தரமான கல்வியைப் பெறும் உரிமையை, ஒரு குழந்தை இழந்து விடக்கூடாது; பள்ளியில் பயிலும்போதே தொழிற்கல்வி அறிவையும் பெற வேண்டும்; தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்; பன்மொழிப் புலமை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, கல்வியில் தலைசிறந்து விளங்கும் பின்லாந்து, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கல்வித் திட்டத்தைப் பின்பற்றி உருவாக்கப்பட்டதுதான், இந்த புதிய கல்விக்கொள்கை.

இதில், ஹிந்தி கட்டாயம் என்று எந்தப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது?

தமிழக மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, புதிய கல்விக் கொள்கை வாயிலாக, ஹிந்தியைத் திணிப்பதற்கு மத்திய அரசு முயல்கிறது என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர் ஆட்சியாளர்கள்.

காரணம், சாதாரண அரசு பள்ளி மாணவன், மூன்று மொழிகளை படித்தால், அவர்களுக்கும், பிரமாண்ட தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகளை படிக்கும் இவர்கள் வாரிசுகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஏழையும் - பணக்காரரும் கல்வியில் சமம் ஆகி விடுவரே! அதனால், புதிய மொந்தையில் பழைய கள்ளை ஊற்றி போதை தேடுகின்றனர்!

தமிழக மக்கள் இனியும், அவர்களுக்கு ஊறுகாய் ஆகிவிடக் கூடாது!



பென்ஷன் தொகையை உயர்த்தலாமே!


ஆர்.பிரேம் சுதாகர், பெரியகுளம், தேனி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில், ஆண்டிற்கு 12.75 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டி யது இல்லை என்று கூறியுள்ளது. இதை, அந்த சம்பள பிரிவினரே எதிர்பார்க்கவில்லை.

மத்திய நிதித்துறை மற்றும் வரி வருவாய் அதிகாரிகள் இதற்கு ஆதரவு அளிக்காதபோதும், பிடிவாதமாக அறிவித்துள்ளார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

வருமான வரி வரம்பை தடாலடியாக உயர்த்திய நிதியமைச்சர், பணியாளர் ஓய்வூதிய திட்டம் எனும், 'இபிஎஸ் - 95' பென்ஷன் தொகையை உயர்த்த மனமில்லாமல் இருக்கிறார். தனியார் துறையில், 25 - 30 ஆண்டுகள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி 1,000 - 2,000 பென்ஷன் பெற்று, லட்சக்கணக்கான முதியோர் வறுமையில் வாடுகின்றனர்.

அவர்களது பென்ஷன் தொகையை, 9,000 ரூபாயாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டும், மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. எதிர்க்கட்சியினரும் இதுகுறித்து பேச மறுக்கின்றனர்.

தனியார் துறை ஓய்வூதியர்களின் வறுமையையும் நிதியமைச்சர் கணக்கில் கொண்டு, 'இபிஎஸ் -95' பென்ஷன் தொகையை உயர்த்த வேண்டும்!



நம்பிக்கையை ஏன் உடைத்தீர்?


எஸ்.கே.ஏ.ஈஸ்வரி அம்மாள், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தமிழக முதல்வருக்கு... தாங்கள் தேர்தல் வாக்குறுதியில் என்ன கூறினீர்கள்... ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவேன் என்றீர்கள்; ஆனால், கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டீர்கள்!

என் கணவர், வேம்பார்பட்டி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிந்து, இறந்து விட்டார். ஐந்து பிள்ளைகள் இருந்தும், எவருடைய ஆதரவும் இல்லை. அனைவரும் திருமணமாகி பல திசையில் இருக்கின்றனர்.

எனக்கு, 71 வயதாகி விட்டது. சரியாக கண்ணு தெரியவில்லை; காதும் கேட்கவில்லை. நான் உயிர் வாழ இருப்பிடம், சாப்பாடு, மருந்து, மாத்திரை இதற்கெல்லாம் யார் உதவி செய்வர்?

கணவரின் ஓய்வூதியம் தான், என்னை வாழ வைக்கிறது. அது இல்லையென்றால் என்னால் என்ன செய்ய முடியும்?

இந்தக் காலத்தில் எந்த பிள்ளைகள் பெற்றோருக்கு உதவுகின்றனர்? அவர்களுடைய குடும்பத்தை பார்க்கவே அவர்களால் முடியவில்லை!

பிள்ளைகள் செய்யாத உதவியை, ஓய்வூதியம் தான் செய்கிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால், அப்பணத்தில் மாடி வீடு, நகைகள் வாங்கப் போவதில்லை; பிள்ளைகள் தயவு இல்லாமல், வயிற்றுப் பசியை தீர்த்துக் கொள்வர்!

நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பித் தானே ஓட்டுப் போட்டோம்... அந்த நம்பிக்கையை ஏன் உடைத்தீர்கள்?

உங்களை மலைபோல் நம்பியவர்களின் நம்பிக்கையை அழித்துவிடாமல், விரைவில், பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வாருங்கள்!



பாடம் கற்பியுங்கள்!


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவிற்கு தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்ட 182 கோடி ரூபாய் நிதியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது, அமெரிக்கா. கேட்காமலேயே அளிக்கப்பட்ட இந்த நிதியுதவி, இந்தியாவின் சுதந்திரமான தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவதற்கு சமம்.

எனவே, என்ன காரணங்களுக்காக இந்த நிதியை அமெரிக்கா அளித்தது, இதனால் பலனடைந்தவர்கள் யார், அவர்கள் அந்த நிதியை எவ்வாறு உபயோகப்படுத்தினர் என்பது போன்ற விபரங்களை, மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.

பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவர் அடிக்கடி வெளிநாடு சென்று வருகிறார்... அங்கே, இந்திய அரசை கொச்சைப்படுத்தி தவறாக பேசுகிறார்; இந்தியாவிற்கு எதிராக பேசும், செயல்பட்டு வரும் தலைவர்களை சந்திக்கிறார்.

அவ்வகையில், இந்திய விரோத ஜார்ஜ் சோரஸின் அமைப்பிற்கும், அமெரிக்க நிதி உதவிக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா; அவரது அமைப்புகள் வாயிலாக, இந்த நிதி உதவி இந்தியாவிற்குள் நுழைந்ததா; இதுபோன்று வேறு அமைப்புகள் எதுவும் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளனவா... என்பது போன்ற விபரங்களையும் கண்டறிந்து வெளியிட வேண்டும்.

தவறு செய்தவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டியது அவசியம்!

ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, தேசவிரோத காரியங்களை செய்யத் துணிந்துள்ள கட்சிகளுக்கு, இத்தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்!








      Dinamalar
      Follow us