/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
10 நாள் குழந்தையுடன் வந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய பெண்
/
10 நாள் குழந்தையுடன் வந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய பெண்
10 நாள் குழந்தையுடன் வந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய பெண்
10 நாள் குழந்தையுடன் வந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய பெண்
ADDED : பிப் 20, 2026 03:08 AM

நான்டெட்: மஹாராஷ்டிராவில், 21 வயது இளம்பெண் ஒருவர் பிளஸ் 2 தேர்வு எழுத, பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையுடன் வந்த சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மஹாராஷ்டிராவின் நான்டெட் நகரைச் சேர்ந்தவர் ஷீத்தல் சந்திரகாந்த் சித்தே, 21. இவர் பிளஸ் 2வில் ஏற்கனவே தோல்வி அடைந்திருந்த நிலையில், விடுபட்ட பாடங்களை இந்தாண்டு எழுத விரும்பினார்.
மஹாராஷ்டிராவில், பிளஸ் 2 பொது தேர்வுகள், கடந்த 10ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில், நான்டெட்டில் உள்ள ஸ்ரீ பஸ்வேஷ்வர் கல்லுாரியில், விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளை ஷீத்தல் எழுதினார்.
திருமணமான இவருக்கு, கடந்த 8ம் தேதி குழந்தை பிறந்த நிலையில், 10ம் தேதி நடந்த ஆங்கில பாடத்துக்கான தேர்வை எழுதினார். கணவர் வேலைக்கு சென்றதை அடுத்து, அன்றைய தினம் தன் சகோதரியுடன் வந்து ஷீத்தல் தேர்வு எழுதினார்.
இந்நிலையில், நேற்று நடந்த அரசியல் அறிவியல் பாடத் தேர்வுக்கு குழந்தையுடன் வந்திருந்தார். இதையடுத்து, 10 நாள் சிசுவை பராமரிக்க, தேர்வு மையமான பஸ்வேஷ்வர் கல்லுாரியில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட அறையில், ஷீத்தல் ஒருபுறம் தேர்வை எழுத, மறுபுறம் தொட்டிலில் துாங்க வைக்கப்பட்ட குழந்தையை தேர்வு மைய உதவியாளர்கள் பராமரித்தனர்.

