UPDATED : ஜூலை 15, 2026 08:53 AM
ADDED : ஜூலை 15, 2026 06:42 AM

கூடலுார்: முதுமலை, மாயார் பகுதிகளில் வன விலங்குகளுக்கு இடையூறு செய்ய கூடாது என்பதற்காக, கோர்ட் உத்தரவின் கீழ், வனத்துறை அறிவிப்பு பலகைகள் வைத்தும், சுற்றுலா பயணியரின் அத்துமீறும் செயல் தொடர்கிறது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி பகுதியில் உள்ள இணைப்பு சாலைகளில் வனவிலங்குகளை பார்ப்பதற்காக சுற்றுலா பயணியர், அதிக அளவில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மசினகுடி -மாயார் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் 'வனவிலங்குகள் அருகில் வாகனத்தை நிறுத்த வேண்டாம்; குறைந்தது, 50 மீ., துாரம் கடைபிடிக்கவும்,' என்ற அறிவிப்பு பலகை வனத்துறையால் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறி, சுற்றுலா பயணியர், தங்கள் வாகனங்களை கரடியின் அருகே நிறுத்தி, அத்து மீறலில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், ''வனவிலங்குகளை அதன் வாழ்விடத்தில் பாதுகாக்கவும், இடையூறு ஏற்படுவதை தடுக்கவும், சுற்றுலா வாகனங்கள் செல்ல கூடிய, மாயார், செம்மநத்தம், சிங்காரா, பொக்காப்புரம் சாலைகளில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனினும், சிலர் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
