/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மீண்டும் ஒருமுறை மோடி ஆட்சி: ராய்ச்சூர் பெண் புல்லட் பயணம்
/
மீண்டும் ஒருமுறை மோடி ஆட்சி: ராய்ச்சூர் பெண் புல்லட் பயணம்
மீண்டும் ஒருமுறை மோடி ஆட்சி: ராய்ச்சூர் பெண் புல்லட் பயணம்
மீண்டும் ஒருமுறை மோடி ஆட்சி: ராய்ச்சூர் பெண் புல்லட் பயணம்
UPDATED : மார் 06, 2024 07:33 AM
ADDED : மார் 06, 2024 04:53 AM

விஜயநகரா : மீண்டும் ஒருமுறை மோடி ஆட்சி என்பதை வலியுறுத்தி, ராய்ச்சூர் பெண் ராஜலட்சுமி முந்தா, மதுரை முதல், டில்லி வரை புல்லட் பைக்கில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம், ராய்ச்சூரைச் சேர்ந்த ராஜலட்சுமி முந்தா என்ற பெண், சட்ட உரிமை கவுன்சில் இண்டியா அமைப்பின் பொதுச் செயலராக செயல்படுகிறார். எப்போதும் தேசியத்தை பற்றி மட்டுமே பேசும் அவர், பல பெண்களுக்கு உதாரணமாக திகழ்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு, வாரணாசியில் 8,600 கிலோ எடை கொண்ட டெம்போ வாகனத்தை இழுத்து கின்னஸ் சாதனை படைத்தார். இதுபோன்று, நாட்டின் 85 இடங்களில், சரக்கு வாகனங்களை இழுத்து சாதனை படைத்துள்ளார்.
யோகா வாயிலாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சென்னையில் ஒரு ஹிந்தி பள்ளியை துவக்கி, 11,000த்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்துள்ளார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, '2024ல் மீண்டும் ஒருமுறை மோடி ஆட்சி' என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
அதுவும், தமிழகத்தின் மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, பிப்ரவரி 12ம் தேதி, புல்லட் பைக் பயணத்தை துவங்கினார். நாடு முழுதும் பயணித்து, ஏப்ரல் 18ம் தேதி டில்லி செல்ல திட்டமிட்டுள்ள அவர், தமிழகம், தெலங்கானா, ஆந்திரா வழியாக, கர்நாடகாவின் சிக்கபல்லாபூருக்கு சில நாட்களுக்கு முன்பு வந்தார். நேற்று முன்தினம் மாலை, கொப்பால் மூலம், விஜயநகராவின் ஹொஸ்பேட்டுக்கு வந்தடைந்தார்.
ராஜலட்சுமி முந்தா கூறியதாவது: இதுவரை 4,500 கி.மீ., துாரம் பயணம் செய்துள்ளேன். இன்னும் 15 மாநிலங்களின் 21,000 கி.மீ., துாரம் பயணம் செய்து, டில்லியை அடைய வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியினால், நாடு சர்வதேச அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. மீண்டும் ஒருமுறை மோடி ஆட்சி அமைந்தால், நாடு வேகமாக வளர்ச்சி அடைவது உறுதி. மகளிர் எதற்கும் அஞ்சாமல், சாகச செயல்களில் ஈடுபட வேண்டும். திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் தனி ஆளாக புல்லட் பைக்கில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளேன். எனக்கு பின்னால், 24 பேர் கொண்ட குழு, ஒரு வேனில் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

