/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
அரசு பஸ்சை சிறைபிடித்த எம்.எல்.ஏ.,
/
அரசு பஸ்சை சிறைபிடித்த எம்.எல்.ஏ.,
UPDATED : ஆக 12, 2025 10:24 AM
ADDED : ஆக 12, 2025 03:55 AM

துாத்துக்குடி: பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் சென்ற அரசு பஸ்களை, கிராம மக்களுடன் தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வும் சேர்ந்து சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே எம்.சண்முகபுரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க.,வைச் சேர்ந்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் பங்கேற்றார். அப்போது, கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் அரசு பஸ்கள் சரியாக நிற்பதில்லை என, குற்றஞ்சாட்டினர்.
துாத்துக்குடியில் இருந்து பஸ்சில் வந்தபோது நடத்துநர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக பெண் ஒருவர் எம்.எல்.ஏ.விடம் புகார் கூறினார். இதையடுத்து, கிராம மக்களுடன் எம்.எல்.ஏ., சேர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று அரசு பஸ்களை சிறைபிடித்தார்.
டிரைவர், கண்டக்டர்களை இறங்கி வருமாறு கூறினார். ஒரு டிரைவர் கீழே இறங்காமல் இருந்ததால், அவரை பார்த்து, 'கூப்பிட்டால் கீழே இறங்கி வர முடியாதா? உன்னை சஸ்பெண்ட் செய்து விடுவேன்' என, எச்சரித்தார்.
இனி நிறுத்தத்தில் சரியாக நின்று செல்ல வேண்டும் என எச்சரித்து, பஸ்களை விடுவித்தார். கிராம மக்களுடன் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., இணைந்து, அரசு பஸ்சை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.