சட்ட விரோத மது விற்பனை; கடைகளை நொறுக்கிய பெண்கள்
சட்ட விரோத மது விற்பனை; கடைகளை நொறுக்கிய பெண்கள்
ADDED : ஏப் 28, 2026 03:57 AM

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அரசு மதுபானத்தை, சட்டவிரோதமாக வாங்கி, கூடுதல் விலைக்கு விற்கும் ஏராளமான சந்துக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, எந்நேரமும் மது கிடைக்கிறது.
போடூர் கிராமத்தில் செயல்படும், நான்கு சந்துக்கடைகளில், அதிகாலை முதலே, மதுபிரியர்கள் மது வாங்கி குடித்து வந்தனர். இதனால், அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவியர், பெண்கள் என, அனைவரும் பாதிக்கப்பட்ட னர்.
போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, நேற்று, அப்பகுதி பெண்கள், வாலிபர்கள் என அனைவரும் சேர்ந்து, போடூர் பகுதியில் செயல்பட்டு வந்த சந்துக்கடைகளை அடித்து நொறுக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்துக்கடைக்காரரான கோவிந்தராஜை, ஓட ஓட பெண்கள் விரட்டி அடித்தனர்.
பென்னாகரம் போலீசார், சந்துக்கடைகளை நடத்தி வந்த கோவிந்தராஜ், 48, மாதேஷ், 58, சவுதாம்பாள், 39, உட்பட மூவரை கைது செய்தனர்.
