/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
21 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த செயின்; பார்சலில் திரும்ப வந்த நெகிழ்ச்சி சம்பவம்
/
21 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த செயின்; பார்சலில் திரும்ப வந்த நெகிழ்ச்சி சம்பவம்
21 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த செயின்; பார்சலில் திரும்ப வந்த நெகிழ்ச்சி சம்பவம்
21 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த செயின்; பார்சலில் திரும்ப வந்த நெகிழ்ச்சி சம்பவம்
ADDED : செப் 08, 2025 05:53 AM

பாலக்காடு; பாலக்காடு அருகே, 21 ஆண்டுக்கு முன் எடுத்த நகையை மீண்டும் உரிமையாளருக்கு பார்சலில் அனுப்பிய நபரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், திருவேகப்புரை பைலிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கதீஜா 65; கடந்த 21 ஆண்டுக்கு முன், வளாஞ்சேரி பகுதியில் டாக்டரை சந்திக்க சென்ற போது, மூன்றரை சவரன் தங்க செயின் தொலைந்து விட்டது.
நேற்று முன்தினம், தனது வீட்டுக்கு வந்த பார்சலை பிரித்த போது, கதீஷா குடும்பத்தினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். பெயர் எதுவும் குறிப்பிடாமல் வந்த பார்சலில், மூன்றரை சவரன் தங்க செயின் இருந்தது.
இது குறித்து கதீஜா கூறியதாவது:
கடந்த, 21 ஆண்டுகளுக்கு முன் நானும் மகன் இப்ராஹிமும், வளாஞ்சேரி பகுதியில் உள்ள மருத்துவரை சந்திக்க சென்றிருந்தோம். அப்போது என் மூன்றரை சவரன் தங்க செயினை தொலைத்து விட்டேன். பயணம் செய்த பகுதிகளில் எல்லாம் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
திட்டுவார்கள் என்ற பயத்தில் ஒரு வாரம் கழித்துதான் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தேன். வெளிநாட்டில் பணிபுரியும் மற்றொரு மகன் பதிலுக்கு புதிய செயினை வாங்கித் தந்தார்.
இழந்த தங்க செயின் குறித்த நினைவுகள் மட்டும் இருந்தது.
எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாதவர் ஒரு கடிதத்துடன் இழந்த செயினுக்கு பதிலாக அதே அளவுள்ள மற்றொரு செயினை பார்சலில் அனுப்பியுள்ளார். முதலில் எங்களால் இதை நம்ப முடியவில்லை. பின்னர் அந்தக் கடிதம் எங்களை நம்ப வைத்தது.
அந்தக் கடிதத்தில், 'சில ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் இருந்து தொலைந்து போன ஒரு தங்க நகை எனக்கு கிடைத்தது. அது என் வாழ்க்கை சூழ்நிலைக்காக பயன்படுத்தி கொண்டேன்.
இன்று நான் அதை நினைத்து வருந்தி வாழ்கிறேன். அதனால், இந்த கடிதத்துடன் அது போன்ற ஒரு தங்க செயின் வைத்துள்ளேன்.
நீங்கள் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு உங்கள் பிரார்த்தனையில் என்னையும் உட்படுத்த வேண்டும்' இப்படி அதில் கூறியிருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தங்க செயின் திருப்பித் தந்த நபரை குறித்து விசாரிக்க விருப்பமில்லை என கதிஜாவின் மகன் இப்ராஹிம் தெரிவித்தார்.