/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
காகம் துாக்கி சென்ற வளையல் 3 ஆண்டுக்கு பின் கிடைத்தது
/
காகம் துாக்கி சென்ற வளையல் 3 ஆண்டுக்கு பின் கிடைத்தது
காகம் துாக்கி சென்ற வளையல் 3 ஆண்டுக்கு பின் கிடைத்தது
காகம் துாக்கி சென்ற வளையல் 3 ஆண்டுக்கு பின் கிடைத்தது
UPDATED : ஜூலை 17, 2025 01:35 PM
ADDED : ஜூலை 16, 2025 11:57 PM

பாலக்காடு: கேரளாவில், காகம் துாக்கி சென்ற தங்க வளையல், மூன்றாண்டுகளுக்கு பின், காகத்தின் கூட்டில் இருந்து திரும்ப கிடைத்ததால், குடும்பத்தினர் மகிழ்ச்சிஅடைந்தனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், மஞ்சேரி திருக்கலங்கோடு பகுதியை சேர்ந்த சரத் என்பவரின் மனைவி ஹரிதா.
இவர், கடந்த, 2022 பிப்., 24ம் தேதி வீட்டின் குளியல் அறை அருகே, துணி துவைப்பதற்காக கையில் அணிந்திருந்த, 1.5 சவரன் எடை கொண்ட தங்க வளையலை, கழற்றி வைத்து இருந்தார்.
அப்போது அங்கு வந்த காகம், திடீரென அந்த வளையலை கவ்விச் சென்றது. பல நாட்கள் தேடியும் வளையல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த மாதம் ஹரிதா வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பில் மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய, அப்பகுதியை சேர்ந்த அன்வர் என்பவர், காகத்தின் கூட்டில் தங்க வளையல் இருந்ததை கண்டு, அவற்றை எடுத்தார்.
தங்க வளையல் உரியவரிடம் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நுாலக செயலர் பாபுராஜிடம் வளையலை ஒப்படைத்தார்.
காகத்தின் கூட்டில் இருந்து வளையல் கிடைத்தது குறித்து, கடந்த மே மாதம் நோட்டீஸ் வாயிலாக நுாலக நிர்வாகத்தினர் அறிவித்தனர்.
தக்க ஆவணங்களுடன் வருவோருக்கு வளையல் வழங்கப்படும் என அதில் தெரிவித்திருந்தனர்.
தகவல் அறிந்த ஹரிதாவும் அவரது குடும்பத்தினரும், வளையல் வாங்கிய பில், வளையல் அணிந்த புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து, நேற்று முன்தினம் வளையலை பெற்றனர்.
காகம் துாக்கிச் சென்றது; பல கைகளுக்கு மாறியது போன்ற பல காரணங்களால், அந்த தங்க வளையல் மூன்று பாகங்களாக உடைந்திருந்தன. அதே நேரத்தில், வளையலை எடுத்துக் கொடுத்து முன்மாதிரியாக செயல்பட்ட அன்வரை அனைவரும் பாராட்டினர்.
காகம் கவ்வி சென்ற வளையல் மூன்று ஆண்டுகளுக்கு பின், கிடைத்துள்ளது, மாநிலம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.