/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கணவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் மாற்றுத்திறனாளி பெண் தவிப்பு; இரக்கமின்றி கறார் காட்டிய அரசு அலுவலர்
/
கணவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் மாற்றுத்திறனாளி பெண் தவிப்பு; இரக்கமின்றி கறார் காட்டிய அரசு அலுவலர்
கணவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் மாற்றுத்திறனாளி பெண் தவிப்பு; இரக்கமின்றி கறார் காட்டிய அரசு அலுவலர்
கணவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் மாற்றுத்திறனாளி பெண் தவிப்பு; இரக்கமின்றி கறார் காட்டிய அரசு அலுவலர்
UPDATED : பிப் 28, 2024 05:29 AM
ADDED : பிப் 28, 2024 12:48 AM

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரைச் சேர்ந்தவர் ஞானவேல்; ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளி. இவரது மனைவி ராஜம்மாள்; பார்வை குறைபாடு உடையவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு குழந்தை மூளை வளர்ச்சி குறைந்த சிறப்பு குழந்தை. மற்றொன்று செவித்திறன் குறைபாடு உடைய குழந்தை.
ஞானவேலால் பணி செய்ய முடியாததால், வீட்டில் இருந்தபடி குழந்தைகளை பராமரித்து வந்தார். ராஜம்மாள் மின்சார ரயிலில் பொருட்கள் விற்பனை செய்து, குடும்பத்தை பராமரித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஞானவேல் மாரடைப்பால் உயிரிழந்தார். வறுமை காரணமாக, இறுதிச் சடங்குகளை செய்வதற்கு கூட பணம் இல்லாமல் ராஜம்மாள் தவித்தார்.
மாற்றுத்திறனாளிகளின் இறுதிச்சடங்கிற்கு, மாற்று திறனாளி நலத்துறை வாரியத்தால், 17,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதை பெறும் முயற்சியில் ராஜம்மாள் ஈடுபட்டார். இதற்காக, திருவள்ளூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் என்பவரை அணுகினார். அதற்கு அவர், உடலை அடக்கம் செய்து இறுதி சடங்கு முடித்துவிட்டு, தாசில்தாரிடம் வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் பெற்று வரும்படி திருப்பி அனுப்பியுள்ளார்.
இத்தகவல் மாற்றுத் திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் சிம்மசந்திரனுக்கு தெரியவந்தது. திருவள்ளூர் விரைந்த அவர், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசனிடம் முறையிட்டார்.
ஆனால், பணம் கொடுக்க சீனிவாசன் மறுத்துவிட்டார்.
உடனடியாக மாற்று திறனாளிகள் மாநில கமிஷனர் அலுவலக இயக்குனர் லட்சுமியை தொடர்பு கொண்டார். அவர், அலுவலரிடம், உடனடியாக, '2,000 ரூபாய் கொடுத்து உதவுங்கள்' எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, ராஜம்மாளை தொடர்பு கொண்ட அலுவலர் சீனிவாசன், 'ஜீபே' எண்ணை அனுப்ப கூறியுள்ளார். அதற்கு ராஜம்மாள், தன் மொபைல் போனில், 'ஜீபே' வசதி கிடையாது. தன் நண்பர் ஒருவர் மொபைல் போன் எண்ணுக்கு அனுப்பும்படி கூறினார்.
ஆனால், 'வேறு எண்ணுக்கு பணம் அனுப்ப முடியாது' என, அலுவலர் சீனிவாசன் மறுத்துவிட்டார். இதனிடையே உடலை நீண்ட நேரம் அப்படியே வைத்துக் கொண்டு இருக்க முடியாது என்பதால், சிம்மச்சந்திரன் தன் தொகை மற்றும் சக நண்பர்கள் உதவியுடன், 22,000 ரூபாயை சேகரித்து கொடுத்து இறுதிச் சடங்கிற்கு உதவியுள்ளார்.
மீண்டும் இயக்குனரைத் தொடர்பு கொண்டு சிம்மச்சந்திரன், எங்களுக்கு அனைத்து உரிமைகளும், சலுகைகளும் இருந்தும், ஏழை பார்வையற்ற பெண், கணவரின் உடலை வைத்துக் கொண்டு தவிக்க விடுவதா எனக் கேட்டுள்ளார்.
இதன் பின், திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை, இயக்குனர் கண்டித்துள்ளார். பின் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
இறுதி சடங்கு நடத்த கூட பணம் இல்லாமல் இறந்த கணவரின் உடலை வைத்துக் கொண்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் தவித்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-- நமது நிருபர்- -

