PUBLISHED ON : ஜன 10, 2025 12:00 AM

மத்திய சென்னை தி.மு.க., - எம்.பி., தயாநிதி: எந்த தைரியத்தில் நம் தலைவர் ஸ்டாலினை கவர்னர் எதிர்க்கிறார் எனப் புரியவில்லை. ஒன்றும் பிடுங்க முடியாது. நாங்க விட்டு விடுவோமா... தமிழகத்திற்கு வந்தால், நாங்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும். நீயா எதுவும் செய்ய முடியாது. இதுபோல் தொடர்ந்து செய்தால், தமிழக மக்கள் உன்னை மன்னிக்க மாட்டார்கள். இதன் விளைவு, பின்னணி வேறு மாதிரி இருக்கும்.
டவுட் தனபாலு: சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் போன்ற தி.மு.க., மேடைப் பேச்சாளர்கள் ரேஞ்சுக்கு இறங்கி அடிக்கிறாரே... தொடர்ந்து எம்.பி.,யாகியும் பிரயோஜனம் இல்ல... கட்சியிலும் அந்தஸ்தான பதவி இல்லை என்பதால, இப்படி எல்லாம் பேசி முதல்வருக்கு, 'ஐஸ்' வைக்கிறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: 'அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது தமிழக வெற்றிக் கழகம் தான்' என்ற பிரகடனத்துடன், தமிழக அரசியலில் கால் பதித்துள்ளார் நடிகர் விஜய். மேல்மட்டத்தில் இருக்கும் மூவர், விஜய் உள்ளிட்ட மொத்த கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், கட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் நிற்பதாக, தொண்டர்கள் புலம்புகின்றனர்.
டவுட் தனபாலு: தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற படா படா கட்சிகளே, தேர்தல் பணிகளை இப்பவே துவங்கிட்டாங்க... 'கட்சியை ஆரம்பிச்சுட்டா போதும்... தானாகவே சி.எம்., ஆகிடலாம்'னு விஜய்க்கு மூவர் அணி உபதேசம் பண்ணியிருக்குமோ என்ற, 'டவுட்'தான் வருது!
தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி: தமிழகத்தில்,ரவி கவர்னராக இருந்தால், பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம், கண்டிப்பாகக் குறைந்து விடும். பா.ஜ., ஒரு ஓட்டுக்கூட வாங்க முடியாது. அதனால்தான் கவர்னரை திரும்பப் பெறுங்கள் என சொல்கிறோம். தமிழகத்திற்கு நீங்கள் வேண்டாம் என, உங்களின் நலனுக்காகவே சொல்கிறோம்.
டவுட் தனபாலு: கவர்னர் ரவி, தமிழகத்தில் தொடர்ந்து இருந்து, பா.ஜ.,வுக்கு ஓட்டுகள் கிடைக்காம போனால், உங்களுக்கு நல்லதுதானே... 'பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே' என்ற பாணியில் நீங்க சிந்திப்பது ஏன் என்ற, 'டவுட்' எழுதே!

