PUBLISHED ON : நவ 29, 2024 12:00 AM

துாத்துக்குடி தொகுதி தி.மு.க., - -- எம்.பி., கனிமொழி: நம் இதயங்களுக்கு நெருக்கமானபொங்கல் திருநாளில், சி.ஏ., தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தி.மு.க., சார்பில் பார்லிமென்டில் ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்ததில், தற்போது ஜன., 16ம் தேதிக்கு தேர்வு மாற்றப்பட்டுள்ளது. இது,எனக்கு நிம்மதியாக இருந்தாலும்,நம் கலாசார விழுமியங்களை, மத்திய அரசு திரும்ப திரும்ப கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
டவுட் தனபாலு: தான் போகும் நாடுகளில் எல்லாம் திருக்குறள்பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் பிரதமர் மோடி பெருமையா பேசுறதா நம்ம ஊர் பா.ஜ.,வினர் தம்பட்டம் அடிச்சுக்குறாங்க... தமிழர்கலாசாரம், பண்பாடு விஷயங்களில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்பட்டால், தமிழகத்தில் தாமரை மலர்வது, 'டவுட்' தான்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகத்தில் தனித்து நின்று, தன் பலத்தை நிரூபித்த கட்சி தே.மு.தி.க., தான். அதே போலத்தான் நாம் தமிழர் கட்சியும். எங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் திருடிக் கொண்டு விட்டால், கூட்டம் நடத்த நாங்கள் எங்கே போவது? பிச்சை தான் எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: தனித்து நின்று பலத்தை நிரூபித்த தே.மு.தி.க.,வின் இன்றைய நிலை என்ன...? உங்க கட்சியிலஇருந்து நிர்வாகிகள் கொத்து கொத்தாக ஓட்டம் பிடிப்பதை பார்த்தால், தே.மு.தி.க.,வுக்கும்கீழே நாம் தமிழர் கட்சி போயிடும்என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., வக்கீல் பிரிவு மாநில தலைவர் வணங்காமுடி: சுவாமி அய்யப்பன் குறித்த அவதுாறு பாடலை பாடி வெளியிட்ட, கானா பாடகி இசைவாணி மீது தமிழகம் முழுதும் பா.ஜ., சார்பில் புகார் அளித்து வருகிறோம். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதித் துறையை நாடுவோம். ஹிந்து மத கடவுள்களை திட்டமிட்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர்.இதை ஒரு சதியாகத் தான் பார்க்கிறோம்.
டவுட் தனபாலு: நடிகை கஸ்துாரியை பிடிக்க இரண்டு தனிப்படைகள் போட்டு, ஹைதராபாத் வரைக்கும் போய்கைது பண்ணிட்டு வந்தாங்களே...இசைவாணி மீது இத்தனை புகார்கள் வந்தும் போலீசார் சும்மா இருப்பதை பார்த்தால், ஹிந்து கடவுள்களை ஏளனம் செய்வோரை, திராவிட மாடல் அரசு பாதுகாக்கிறதோ என்ற, 'டவுட்' தான் வருது!

