PUBLISHED ON : செப் 22, 2026 12:53 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தமிழகத்தில் ஒரே நாளில் எட்டு படுகொலைகள் நடந்துள்ள நிலையில், காவல் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் விஜய், சட்டம் -- ஒழுங்கை பாதுகாக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் -- ஒழுங்கின் முக்கியத்துவம் முதல்வருக்கு புரிகிறதா அல்லது தன் நிர்வாகத் திறமையின்மையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாரா?
டவுட் தனபாலு: உங்க கட்சியில இருந்த நிர்வாகிகள் எல்லாம் வேற கட்சிக்கு தாவிடாம தடுக்க முடியாத, 'நிர்வாகத் திறமை'யுள்ள நீங்க, முதல்வரோட நிர்வாகத் திறமையை எடை போடுவது சரியா என்ற, 'டவுட்' தான் வருது!
-------
மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம்: எங்கள் ஆதரவில் தான் த.வெ.க., ஆட்சி நடக்கிறது என்பதை மறக்க வேண்டாம். தன்னிச்சையாகச் செயல்பட்டால், வேறு முடிவு எடுக்க நேரிடும். 34 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்ற இந்த அரசு, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, புதிய தலைமை செயலக இடத்தை முடிவு செய்ய வேண்டும். எதிர்ப்பை மீறி பட்டினப்பாக்கத்தில் கட்டினால் தடுப்போம். மாறாக, கிண்டி ரேஸ்கோர்ஸ் அல்லது கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தைப் பரிசீலிக்கலாம்.
டவுட் தனபாலு: உங்க ஆதரவில் மட்டும் த.வெ.க., ஆட்சி நடக்கலை... காங்., - வி.சி.க., - முஸ்லிம் லீக்னு மற்ற கட்சிகளும் ஆதரவு தர்றாங்களே... 'ஆட்சிக்கு ஆதரவு வாபஸ்' என்பது தான், 'அந்த வேற முடிவு' என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... ஒருவேளை நீங்க ஆதரவை வாபஸ் வாங்கினாலும், த.வெ.க., அரசுக்கு எந்த ஆபத்தும் வராது என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
-----
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத்: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசுக்கு கூடுதல் அவகாசம் தேவை. மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, நல்ல விளைச்சலை தரும் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய, விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: 'மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை' என்பதை வெளிப்படையா சொல்லிட வேண்டியது தானே... அதை விட்டுட்டு, 'மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மாறுங்க'ன்னு சுத்திவளைக்கணுமா என்ற, 'டவுட்' தான் வருது!
