PUBLISHED ON : செப் 07, 2026 01:14 AM

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: மெர்சல் படத்தில், காளையை அடக்குவது போல த.வெ.க., தலைவரான முதல்வர் விஜய் நடித்திருப்பார். அவரது ஆட்சியில், அவர் கட்சி எம்.எல்.ஏ., ஒருவர், ஜல்லிக்கட்டு பற்றி இழிவாக பேசி இருக்கிறார். நடிகராக விஜய் என்ன சாதித்தார், எதை வைத்து அவரை மக்கள் தேர்ந்தெடுத்தனர்; தமிழனுக்கு மூளை இருக்கா, இல்லையா?
டவுட் தனபாலு: தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தான் ஜெயித்தால், 'தமிழர்கள் தன்மானம் மிக்கவர்கள்' என்றும், தோற்று விட்டால், 'தமிழர்கள் சொரணை கெட்ட ஜென்மங்கள்; சோற்றால் அடித்த பிண்டங்கள்'னும் வசைபாடுவார்... அவரது வழியில், நீங்களும் இறங்கிட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: த.வெ.க., ஆட்சியில், 'ரீல்ஸ்' மட்டுமே அதிகரித்துள்ளது. 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு, த.வெ.க., தரப்பில் இருந்து வரும் வரை, தமிழக அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம்' என்று அறிவிக்க, காங்., அமைச்சர்களுக்கு துணிச்சல் இருக்கிறதா?
டவுட் தனபாலு: வடமாநிலங்கள்ல, பெரும்பாலும் பா.ஜ., தான் ஆட்சியில இருக்குது... கர்நாடகா, தெலுங்கானா, கேரளா போன்ற தென்மாநிலங்கள்ல காங்., ஆட்சி நடக்குது... தமிழகத்திலும் தேய்ந்து கிடந்த காங்., கட்சிக்கு, விஜய் வரவால புத்துணர்ச்சி கிடைச்சு, ஆட்சியிலும் அங்கம் வகிப்பதை, உங்களால ஜீரணிக்க முடியலை என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
மேற்கு வங்கத்தில் செயல்படும், திரிணமுல் காங்., கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி: திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது, தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்தால், டில்லியில் உள்ள பா.ஜ., தலைவர்களின் வீடுகளுக்கு முன், நாங்கள் போராட்டம் நடத்துவோம். எங்கள் கட்சி அலுவலகத்தின் மீதான தாக்குதல், மேற்கு வங்கத்தில் சீர்குலைந்து வரும் சட்டம் - ஒழுங்கு நிலையை வெளிப்படுத்துகிறது.
டவுட் தனபாலு: தொடர்ந்து, 15 ஆண்டா மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்து நீங்க நடத்திய ஆட்சியில, எதிர்க்கட்சியினரை உங்க கட்சியினர் துரத்தி துரத்தி அடிச்சாங்களே... அப்ப, வாங்கியதை அவங்க இப்ப திருப்பி கொடுக்கிறாங்க, அவ்வளவு தான்... விதைத்த வினையை நீங்க அறுவடை பண்ணி தான் ஆகணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
