PUBLISHED ON : ஜூன் 09, 2026 12:00 AM

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்:
பா.ஜ.,வில் இருந்து விலகிய அண்ணாமலை தனி இயக்கம் ஆரம்பித்துள்ளார். அவருடன் ஒன்றிரண்டு பா.ஜ., பொறுப்பாளர்கள் சென்றுள்ளனர். அதாவது, 'பிரதமர் மோடி ஆசியுடன் தான், நாங்கள் தனி இயக்கம் ஆரம்பிக்கிறோம்' என்று அவர்களை, அண்ணாமலை மூளைச்சலவை செய்துள்ளார். பிரதமர் மோடியின் ஆசியோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆசியோ, தேசிய தலைவர்களின் ஆசியோ, எந்த இயக்கத்திற்கும் கிடையாது. பா.ஜ., தொண்டர்கள் யாரும், எதையும் நம்பி போக வேண்டாம்.
டவுட் தனபாலு:
'கட்சியை விட்டு போறேன்'னு சொன்ன அண்ணாமலையை, 'சரி போங்க'ன்னு சொல்லாம, உங்களது டில்லி தலைவர்கள் எல்லாம் கூப்பிட்டு வச்சு, மூணு நாளா ஆலோசனை நடத்தியது ஏன்...? அதனால, அண்ணாமலை சொல்றதை தான் எல்லாரும் நம்புவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
---
விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்:
தி.மு.க., அரசின் ஊழல், 36 சதவீத கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம், நிர்வாக தோல்வி மற்றும் அகந்தைக்கு எதிராகவே தமிழக மக்கள் ஓட்டு போட்டனர். கடந்த ஐந்தாண்டுகளில் நடந்தது வளர்ச்சி அரசியல் அல்ல; கமிஷன் மாடல் ஆட்சி. அதற்கான தண்டனையை தான், தேர்தலில் மக்கள் வழங்கியுள்ளனர்.
டவுட் தனபாலு:
'தி.மு.க., அஞ்சு வருஷங்களா நல்லாட்சி தரல'ன்னு இப்ப சொல்றீங்களே... தேர்தலுக்கு முன்னாடியே இது பத்தி கடுமையா பேசி, கூட்டணியில் இருந்து வெளியே வந்திருந்தால், 'டவுட்' இல்லாம உங்களை பாராட்டியிருக்கலாம்... அவங்க தயவில் ஐந்து சீட்கள்ல ஜெயிச்சுட்டு, கூட்டணியை முறிச்சதும் குற்றம் சாட்டுவது சரியா என்ற, 'டவுட்' வருதே!
------
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:
இப்போது, தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் தான், தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு முட்டு கொடுத்துள்ளனர். அவர்களின் தயவு உள்ள வரை தான், விஜய் ஆட்சி இருக்கும். த.வெ.க., ஆட்சி என்ற நாற்காலிக்கு, இரண்டு கால்கள் இரவல் கால்கள். அந்த இரண்டு கால்கள் எந்த நேரத்திலும் உடையும்; நாற்காலி கவிழும்.
டவுட் தனபாலு:
'தி.மு.க., கூட்டணி கட்சிகள் காலை வாரிட்டா ஆட்சி கவிழ்ந்துடும்'னு நீங்க சொல்றீங்க... தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், 'த.வெ.க., ஆட்சி மூணு மாதங்கள் கூட தாங்காது'ன்னு ஆரூடம் கணிக்கிறாரு... த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க, நீங்க ரெண்டு பேரும் கூட்டணி அமைக்க போறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
