PUBLISHED ON : மே 08, 2026 12:30 AM

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத்: புதிய தலைவர், புதிய கட்சி, புதிய அடையாளம் என்று மாற்றத்திற்கான அடையாளமாக, த.வெ.க.,வுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை மக்கள் பரிசாக அளித்து, தி.மு.க.,வை வீழ்த்தியுள்ளனர். எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல், மக்கள் சேவையில், தன்னை ஈடுபடுத்தி கொண்டு வெற்றி பெற்றுள்ள விஜய், அரசியல்வாதியாக, சிறந்த நிர்வாகியாக செயல்பட ஆறு மாதங்கள் தமிழக அரசியல் கட்சிகள், அவகாசம் வழங்க வேண்டும். அதனால், அனைவரும் த.வெ.க., ஆட்சி அமைக்க ஆதரவளிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... இவர் கட்சியில, 10 பேர் ஜெயித்திருந்தால் இப்படி ஆதரவு வழங்க சொல்லியிருப்பாரா...? அதேநேரம், 59 வருஷங்களா ஆட்சியில் இருந்து அரசாங்க கஜானாவை சுரண்டியே பழக்கப்பட்ட திராவிட கட்சிகள், விஜய்க்கு ஆறு மாதங்கள் அவகாசம் தருமா என்பது, 'டவுட்'தான்!
lll
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய், எங்கள் வீட்டுப் பையன், அவருக்கு வாழ்த்துகள். புதிதாக அமையும் த.வெ.க., ஆட்சிக்கு மனதார வாழ்த்துகள். விஜய் எங்களுக்கு புதியவர் அல்ல; விஜயகாந்துடன் வாழ்ந்தவர். எங்கள் பக்கத்து வீடு தான்.
டவுட் தனபாலு: அது சரி... தேர்தலுக்கு முன்னாடி, 'அரசியலில் விஜய் குழந்தையாகத்தான் இருக்கிறார்'னு விமர்சனம் செய்துட்டு, இப்ப பிளேட்டை திருப்பி போடுறீங்களே... விஜய்க்கு ஆதரவு குடுத்து, அமைச்சர் பதவி ஏதும் கிடைக்குமான்னு ஆழம் பார்க்கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
lll
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: இது ஜனநாயகத்தின் தீர்ப்பு; மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். ம.தி.மு.க.,விடம் த.வெ.க., ஆதரவு கேட்காது; த.வெ.க.,வுக்கு ம.தி.மு.க.,வின் ஆதரவு கிடையாது. தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எதுவும், வேறு கட்சியுடன் தொடர்பில் இல்லை. தி.மு.க., கூட்டணி கட்சிகள், யாருக்கும் ஆதரவு அளிக்காது.
டவுட் தனபாலு: நீங்க இப்படி சொல்லி வாய் மூடுறதுக்குள்ள, முதல் ஆளாக காங்., கட்சி, விஜய் முகாமுக்கு தாவிடுச்சு... உங்களுக்கும் போகலாம்னு ஆசை இருந்திருக்கும்... ஆனா, உங்க கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இருவரும், உதயசூரியன் சின்னத்தில் ஜெயித்திருப்பதால், அது சாத்தியமில்லை... அதனால தான், 'சீச்சீ... இந்த பழம் புளிக்கும்'னு பேசுறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
lll

