PUBLISHED ON : ஏப் 14, 2026 01:46 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி: 'இது டில்லிக்கும், தமிழகத்திற்குமான தேர்தல்' என, முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறுகிறார். அவர், இதை லோக்சபா தேர்தல் என நினைத்துக் கொண்டு இருக்கிறார். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஒரு இடத்தில் கூட மது, போதைப் பொருட்கள் ஒழிப்பு பற்றி ஏன் பேசவில்லை? இளைஞர்கள் எப்படி நாசமாக போனாலும் பரவாயில்லை என விட்டு விட்டனரா?
டவுட் தனபாலு: தி.மு.க.,வில் இருக்கும் பலர், சாராய தொழிற்சாலைகள் நடத்துறாங்க... அதுல சம்பாதிக்கிற பணத்தின் ஒரு பகுதியை, கட்சியின் தேர்தல் செலவுகளுக்கு தாராளமா தர்றாங்க... அப்படி இருக்கிறப்ப, மது ஒழிப்பு பத்தி தேர்தல் அறிக்கையில் அறிவித்து, சொந்த செலவில் சூனியம் வச்சுக்குவாங்களா என்ற, 'டவுட்' இவருக்கு வரலையா?
lll
பத்திரிகை செய்தி: சில மாதங்களுக்கு முன், அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறி, த.வெ.க.,வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கோபிசெட்டிப் பாளையம் தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிடுகிறார். பவானிசாகர் தொகுதி த.வெ.க., வேட்பாளர் தமிழ்செல்வியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட செங்கோட்டையன், இரட்டை இலைக்கு ஓட்டு போடுமாறு கூறினார். இதனால், த.வெ.க., தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, சுதாரித்த செங்கோட்டையன், 'நீண்ட காலமாக அந்த கட்சியில் இருந்ததால், பழக்க தோஷத்தில் வந்து விட்டது' என கூறி சமாளித்தார்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வை, 1972ல் எம்.ஜி.ஆர்., துவங்கியதில் இருந்து, அந்த கட்சியில் இருந்தவர் செங்கோட்டையன்... 54 வருஷங்களா அவரது நாடி, நரம்பு, ரத்தம், சதையில் ஊறி போயிட்ட இரட்டை இலை, அவ்வளவு சீக்கிரம் மறந்து போயிடுமா... ஓட்டுப்பதிவு நாளன்றும், பழக்க தோஷத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போட்டுடுவாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
lll
தமிழக முதல்வர் ஸ்டாலின்: அ.தி.மு.க., ஆட்சியின் அலங்கோலங்களை சொல்லத் துவங்கினால், அது, சீன பெருஞ்சுவர் போல் நீண்டு கொண்டே போகும். தமிழகத்தில் அ.தி.மு.க., ஜெயித்தாலும், பா.ஜ., ஆட்சி தான் அமையும்.
டவுட் தனபாலு: தமிழகத்தில், 1967ல் துவங்கி, 59 வருஷங்களா தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளை மாறி மாறி பார்த்துட்டு, நிறைய வாக்காளர்கள் சலிப்புல இருக்காங்க... பா.ஜ., ஆட்சியை விரும்புற அவங்க, நீங்க சொல்றதை நம்பி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போட்டுட்டா, உங்க வெற்றி கேள்விக்குறியாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll

