PUBLISHED ON : ஜன 25, 2026 01:49 AM

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: நானும் தினகரனும், ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அளவுக்கு, தி.மு.க.,வையும், ஸ்டாலினையும் வேறு யாருமே விமர்சனம் செய்யவில்லை. அப்படிப்பட்டவர்களே ஒன்றாக கூட்டணி அமைக்கும்போது, தினகரனுடன் எங்களுக்கு எந்த சங்கடமோ, மன வருத்தமோ இல்லை. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்காகவே, தினகரனோடு ஒன்றாக இணைந்தோம்.
டவுட் தனபாலு: உங்க கருத்தை மனப்பூர்வமா ஏத்துக்கலாம்... அதேபோல, ஜெ., வளர்த்த, இன்னும் சொல்ல போனால், அவரால் மூன்று முறை முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்ட பன்னீர்செல்வத்துடனும் நீங்க இணைவீங்களா என்ற, 'டவுட்' எழுதே!
பத்திரிகை செய்தி: தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை, த.மா.கா., தலைவர் வாசன் சந்தித்து பேசினார். அப்போது, சட்டசபை தேர்தலில், த.மா.கா., போட்டியிட விரும்பும், 10 தொகுதிகளுக்கான பட்டியலை கொடுத்து, அந்த தொகுதிகளில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாக வாசன் தெரிவித்துள்ளார். அதற்கு, 'அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியிடம் கேட்டு நல்ல முடிவெடுக்கலாம்' என, பியுஷ் கோயல் கூறியுள்ளார்.
டவுட் தனபாலு: அது சரி... 'கேட்கிறதை கேட்டு வைப்போம்... குடுக்கிறதை வாங்கிப்போம்' என்ற மனநிலையில் தான் வாசன் இருப்பாரு... தப்பி தவறி, பெருந்தன்மையோடு, 10 சீட்களை த.மா.கா.,வுக்கு ஒதுக்கிட்டாலும், 10 வேட்பாளர்களை தேடி பிடிக்கிறதுக்குள்ள வாசன் பரிதவிச்சி போயிடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், '2021 சட்டசபை தேர்தலின்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில், 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனால் தான், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் எனக்கு இனிப்பு ஊட்டி நன்றி தெரிவித்தனர்' என கூறியிருக்கிறார். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளில் ஒன்றே ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட்ட நிலையில், 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாக, முதல்வரே சட்டசபையில் பொய் சொல்லியது கண்டிக்கத்தக்கது.
டவுட் தனபாலு: 'முதல்வர் பொய் சொல்கிறார்'னு அரசு ஊழியர் சங்க தலைவர்கள் தானே சொல்லணும்... 'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை' என்பது மாதிரி, 'ஏதோ, இந்த பென்ஷன் திட்டத்தையாவது தந்தாரே'ன்னு அவங்க மனசை தேத்திக்கிட்டாங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!

