PUBLISHED ON : ஜன 11, 2026 03:15 AM

தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, மன்னிப்பு கடிதம் கொடுத்தோம். 'கட்சியில் இருந்து எங்களை நீக்கினாலும், 12 ஆண்டுகளாக, தி.மு.க., விசுவாசிகளாகவே இருக்கிறோம். வேறு கட்சிக்கு செல்லாத எங்களை, மீண்டும் தி.மு.க.,வில் இணைத்து கொள்ளுங்கள்' என, அதில் தெரிவித்துள்ளோம்.தேர்தலுக்குள் நல்ல முடிவு கிடைக்கும். எங்கள் நிலைப்பாட்டிற்கு, மு.க.அழகிரி தடையாக இருக்க மாட்டார்.
டவுட் தனபாலு: நீங்க எல்லாம் அழகிரியுடன் சேர்த்து தான், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டீங்க... ஒருவேளை, உங்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கிட்டாலும், தன் உடன்பிறந்த அண்ணன் அழகிரியை கட்சியில் சேர்க்காம முதல்வரால இருக்க முடியுமா...? அதனால, ஆற அமர யோசித்து தான் முடிவெடுப்பார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: தமிழகத்தில் ஹிந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளுக்கு முடிவு கட்டும் வகையில், தி.மு.க., செயல்படுவதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, 4,000 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி உள்ளோம்; 997 கோவில்களுக்கு சொந்தமான, 7,701 கோடி ரூபாய் மதிப்பிலான, 7,655 ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம். அனைத்து சமயத்தவரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, மத உரிமையை காப்பாற்றும் ஆட்சியை நடத்துகிறோம்.
டவுட் தனபாலு: அனைத்து சமயத்தவரின் நம்பிக்கைக்கு மதிப்பு அளிக்கிறீங்களா... அப்படி என்றால், தமிழகத்தில் பெரும்பான்மை ஹிந்துக்கள் கொண்டாடும், ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி பண்டிகைக்கு ஏன் வாழ்த்து சொல்ல மாட்டேங்கிறீங்க என்ற, 'டவுட்'டுக்கு தங்களிடம் விடை இருக்குமா?
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: சசிகலா, பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.,வில் மீண்டும் சேர்க்கும் எண்ணம் இல்லை; அவர்களுக்கு இடம் கிடையாது என்பதை பலமுறை கூறிவிட்டேன். தினகரனின் அ.ம.மு.க., எங்கள் கூட்டணிக்குள் வருமா என்ற கேள்விக்கு குத்துமதிப்பாக சொல்ல எதுவும் இல்லை. சில கட்சிகள் எங்களோடு வரும்; பேச்சு நடத்துகின்றன.
டவுட் தனபாலு: தினகரன் வந்தால், அவரை சமாளிப்பது எளிது... சசிகலாவும், பன்னீர்செல்வமும் உள்ளே வந்துட்டா, அவங்களால உங்க கட்சியில் பதவிக்கு வந்த, 'மாஜி' அமைச்சர்கள், பழைய பாசத்துல அவங்க பக்கம் தாவிடுவாங்க... அப்புறம், உங்க பதவிக்கு பங்கம் வந்துடும்னு நீங்க பயப்படுவது, 'டவுட்' இல்லாம தெரியுது!

