PUBLISHED ON : செப் 02, 2025 12:00 AM

தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ்: ஜி.கே.மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சிக்கு நான் வந் திருப்பது, மூப்பனார் குடும்பம் மீது கொண்டிருக்கும் மரியாதை யின் வெளிப்பாடு. அதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்து விட்டதாக நினைக்க வேண்டாம். நாங்கள் யாரோடு கூட்டணி சேரப் போகிறோம் என்பது குறித்து, 2026 ஜன., 9ல் கடலுார் மாநாட்டில் அறிவிப்போம்.
டவுட் தனபாலு: அது சரி... ஒருபக்கம், முதல்வர் ஸ்டாலினை போய் நலம் விசாரிக்குறீங்க... மறுபக்கம், தே.ஜ., கூட்டணி கட்சிகளுடன் உறவாடுறீங்க... பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுற உங்க சாமர்த்தியம், வேற யாருக்கும் வருமா என்பது, 'டவுட்' தான்!
பா.ம.க., தலைவர் அன்புமணி: தொழில் முதலீடுகளை ஈர்க்கப் போவதாக கூறி ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒன்பது நாள் சுற்றுலா சென்றுள்ளார். முன்னதாக சென்னையில் பேட்டியளித்த அவர், 'தி.மு.க., ஆட்சியில், 10.63 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் வழியே, 32 லட்சத்து 81,032 பேருக்கு வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது' என கூறியுள்ளார். அனைத்துமே அப்பட்டமான பொய்.
டவுட் தனபாலு: அது சரி... '10.63 லட்சம் கோடி ரூபாய் முதலீடும் வந்துடுச்சு; 32 லட்சம் சொச்சம் பேருக்கும் வேலை கிடைச்சிடுச்சு'ன்னு முதல்வர் எங்கேயும் சொல்லவில்லையே... முதல்வர் பொய் சொல்லவில்லை; அதே நேரம் நிஜத்தையும் சொல்லவில்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!
தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதால், தமிழக பா.ஜ.,வில் சேர்ந்துள்ள கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத்தில் கருத்தரங்கம் நடத்த, சிறிய அரங்குகள், 210 பவுண்டுக்கு, அதாவது நம் ஊர் பணத்தில், 25,000 ரூபாய் வாடகைக்கு கிடைக்கும். முதல்வர் ஸ்டாலின் லண்டன் செல்வதால், தி.மு.க.,வினர் ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத் தில், சிறிய அரங்கை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதில் தான் ஈ.வெ.ரா., படத்தை திறக்க இருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
டவுட் தனபாலு: அடடா... மைசூருக்கும், மைசூர் போண்டாவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது மாதிரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும், ஈ.வெ.ரா., பட திறப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு போட்டு உடைச்சுட்டீங்களே... உங்களை ஏன்டா கட்சியை விட்டு வெளியேற்றி னோம்னு தி.மு.க.,வினர் நொந்து போயிருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!